நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள்!

நெல்லையில் உள்ள மனோனமணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான மூட்டா முன்வைத்துள்ளது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான மூட்டா முன்வைத்துள்ளது. 

மூட்டா குற்றச்சாட்டு

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை மீதான புகாரைத் தொடர்ந்து அவரை தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. பணி நியமனத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்ற நபர்களை நியமனம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ’மூட்டா’ சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.

இதுதொடர்பாக மூட்டா சங்கத்தின் தலைவர் சுப்பாராஜூ, பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். ``நெல்லை பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும், சமூக விழிப்பு உணர்வையும், ஜனநாயக மாண்பையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 

இந்தப் பல்கலைக்கழக துணைவேந்தராக பாஸ்கர் பொறுப்பேற்ற பின்னர் ஆசிரியர் நியமனங்களில் ஊழல் நடைபெறுகிறது. கணிப்பொறி அறிவியல் துறையில் ஒருவரை யூ.ஜி.சி பரிந்துரைத்த பல்கலைக்கழக பேராசிரியருக்கான அடிப்படைத் தகுதி இல்லாத நிலையிலும் பணியில் சேர்த்துள்ளார். இதேபோல பல துறைகளிலும் நடந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. 
  
துணை வேந்தராக பொறுப்பேற்பவருக்கு அடிப்படைத் தகுதியான 10 வருட பணி அனுபவம் தேவை. ஆனால், யூ.சி.சி விதிமுறைப்படி பாஸ்கருக்கு 10 வருட அனுபவம் கிடையாது. அவர் 7 வருட அனுபவம் மட்டுமே உள்ள நிலையில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது செல்லாது. இதுதொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தோம். இரண்டு மாதமாகியும் எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

அதனால் அவரது பணி நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடர இருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் சிண்டிகேட், செனட் குழுக்களில் தனக்கு வேண்டியவர்களை மட்டுமே நியமித்திருக்கிறார். அவரது ஊழல்கள் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரப் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். தொடர் போராட்டங்களையும் முன்னெடுப்போம்’’ எனத் தெரிவித்தார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!