``நாங்களும் சமூக விரோதிகள்தாம்!" - முத்தரசன் ஆவேசம்

முத்தரசன்

கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்றால் நாங்களும் சமூக விரோதிகள்தாம் என்று கோவையில் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மத்திய அரசால் பறிபோய்க்கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக  இருந்தாலும் உண்மையில் ஆளுநர் மூலமாக மத்திய அரசு தனது அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகதான் தமிழக அரசு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

கோவை மக்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்வது தமிழக அரசின் கடமையாக இருக்கும் நிலையில், கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள குடிநீர் விநியோகத்தை சுயஸ் எனப்படும் வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதை ரத்து செய்ய வலியுறுத்தி 29-ம் தேதி, சி.பி.ஐ சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப் போகிறோம்.

அதேபோல சென்னை-சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்கும் திட்டம் தேவையில்லை. பாதிக்கப்படும் விவசாயிகளிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை. அரசிடம் விளக்கம் கேட்பவர்களும் கைது செய்யப்படுகின்றனர். கருத்துக் கூறவே கூடாது என மிகக் கடுமையான அடக்குமுறையை மாநில அரசு கடைப்பிடிக்கிறது. கருத்து தெரிவிப்பவர்கள் சமூக விரோதிகள் என்றால் நாங்களும் சமூக விரோதிகள்தான். இதுதொடர்பாக சேலத்தில் ஜூலை 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், அங்கு அமைதி திரும்புவதாக கூறும் நிலையில், அங்கு உள்ள மக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் அரசு காவல்துறை மூலமாக ஈடுபடுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் என்ன செய்வது என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் கூறியிருப்பதன் மூலம் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக இருப்பது உறுதியாவதாகவும், மக்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டதைப் போல தெரிகிறது. தமிழக அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்யும் பொறுப்பு மத்திய அரசின் கையில் இருக்கிறது. அவர்களை விடுவிக்காமல் இருப்பது மனிதாபிமானமற்ற செயல். 

காவிரி பிரச்னை தீர்ந்தபாடு இல்லாத சூழலில் காவிரி உரிமையை மீட்டோம் என வெற்றி விழா கொண்டாடுவது கேலிக்குறிய விஷயம். காவிரி வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகக் காடுகளில் நக்சலைட்டுகள் இருந்தால் அது தமிழக உளவுதுறைக்கும் மத்திய உளவுதுறைக்கு தெரியாதா? பொன்.ராதாகிருஷ்ணனா பொய் ராதாகிருஷ்ணனா? அப்படி உளவுத்துறை பார்க்கும் வேலையை பொன்.ராதாகிருஷ்ணன் பார்த்திருந்தால் நக்சலைட்டுகள் குறித்த பட்டியலைக் கொடுக்கலாம், அதைத் தவிர பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தமிழக மக்கள் போராடுவதை ஏற்க முடியாமல் போராடுபவர்களைத் தீவிரவாதிகள், நக்சலைட் என சொல்கிறார்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!