வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (22/06/2018)

கடைசி தொடர்பு:08:30 (22/06/2018)

வேல்முருகன் மீது பொய் வழக்கா? முன் ஜாமீன் கேட்டு மனு !

திண்டுக்கலில் டாஸ்மாக் வாகனத்துக்கு தீ வைத்த விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

வேல்முருகன்

திண்டுக்கலில் டாஸ்மாக் வாகனத்துக்கு தீ வைத்த விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,  'ஜூன் 1-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் எரியோடு டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு விநியோகம் செய்ய 25 லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் வாகனத்தில் கொண்டு செல்லபட்டது. வெள்ளப்பம்மன்பட்டி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் மதுபாட்டில்கள் இருந்த வாகனத்தைத் தீயிட்டு கொளுத்தினர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், 'எங்கள் கட்சித் தலைவரை சிறையில் அடைத்துவிட்டு நீங்கள் மதுபாட்டில்கள் விநியோகம் செய்கிறீர்களா ?' எனக் கூறி மதுபானங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதில் 7 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரித்து சேதமடைந்தன. இந்தச் சம்பவம் நடந்தபோது நான் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் இருந்தேன். எனக்கும் இச்சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், இச்சம்பவம் தொடர்பாக வடமதுரை போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, டாஸ்மாக் வாகனத்துக்கு தீ வைத்த விவகாரம் தொடார்பாக வட மதுரை காவல் நிலையத்தில் என் மீது பதியப்பட்ட வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.