வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (22/06/2018)

கடைசி தொடர்பு:09:30 (22/06/2018)

`அ.தி.மு.க-வுக்கு யாரும் சவாலாக இருக்க முடியாது!’- மைத்ரேயன்

அ.தி.மு.க-வுக்கு யாரும் சவாலாக இருக்க முடியாது என மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார். 

மைத்ரேயன்


காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் திருப்போரூரை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் அ.தி.மு.க சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை எம்.பியான வ.மைத்ரேயன் கலந்துகொண்டார். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மக்களைச் சந்திக்க வேண்டிய கமல்ஹாசன், போய் தலைவர்களை எல்லாம் சந்தித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.கவுக்கு யாரும் சவாலாக இருக்க முடியாது. ஏனென்ன்றால் இது அம்மாவின் கட்சி. இது தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காகப் போராடக் கூடிய கட்சி. அதுமட்டுமில்லை, கூட்டணி இல்லாமலேயே தனித்து நின்று வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை கொண்ட கட்சி. கமல்ஹாசன் தேர்தல் வரை இருக்கிறாரா என்று பாருங்கள் முதலில்’’ என்றார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார். கூட்டணி பேசவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டாலும், இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``கமல்ஹாசன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையோ, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை’’என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.