வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (22/06/2018)

கடைசி தொடர்பு:15:04 (22/06/2018)

குரங்கு கலாட்டா, ஆவி ஷுட்டிங்... பிக் பாஸ் வீட்டு ‘ஹிஹி’ வதந்தி!

பிக் பாஸ் வீட்டுக்குள் குரங்குகள் நடமாட்டம்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, சினிமா சின்னத்திரைப் பிரபலங்கள் பதினாறு பேர் எவ்வித தொடர்பு வசதிகளுமின்றி ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவுக்காக தங்கி இருக்கும் அந்த வீடு சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் முன்பு ’ஈவிபி வேர்ல்டு’ என்கிற பெயரில் தீம் பார்க் அமைந்திருந்தது.

2012ல் நண்பர்களுடன் விமானப் பணிப்பெண் ஒருவர் இந்தக் கேளிக்கைப் பூங்காவுக்கு வந்திருந்தபோது ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார். அத்துடன் தீம் பார்க் மூடப்பட்டு இடமே எவ்வித பயன்பாடும் இல்லாமல் கிடந்தது.

பிக் பாஸ்

இப்படிப் பயன்படுத்தாமல் கிடந்த நாள்களில் குரங்குகள், பாம்புகள் போன்றவை இந்த இடத்தைத் தங்களது இருப்பிடங்களாக்கிக் கொண்டன. ராட்டின விபத்து வழக்கு என்ன ஆனதோ தெரியாது, ஆனால் சில ஆண்டுகள் கழித்து சினிமா ஷூட்டிங் நடத்த திறந்து விட்டார்கள். ‘காலா’வின் தாராவி செட் இங்கு அமைக்கப்பட்டதே.

பிக்பாஸ் முதல் சீசனின் வீடும் இந்த வளாகத்தின் இடதுபுற முகப்பிலேயேதான் அமைக்கப்பட்டது. அதே வீடுதான் இப்போது இரண்டாவது சீசனிலும். முதல் சீசனில் போட்டியாளர்கள் தங்கியிருந்தபோதே அந்த வீட்டுக்குள் இரவு நேரங்களில் குரங்குகள் தாவிக் குதித்து பயமுறுத்தியதாக ஒருசில போட்டியாளர்களே சொல்லியிருந்தனர்.

இப்போது புதிதாக இன்னொரு பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது. வளாகத்தில் தென்பட்ட செக்யூரிட்டி ஒருவர், இதுகுறித்து கூறுகையில், ‘வேற ஒண்ணுமில்ல சார். ரொம்ப நாளாப் பூட்டிக் கிடந்துச்சு இல்லையா, அதுவே ஒரு பயத்தை உண்டாக்கும். இறந்த பொண்ணு ஆவியா திரியுதுன்னு சும்மா எவனோ கொளுத்திப் போட்டுட்டான் போல. ஆவி சம்பந்தப்பட்ட ஒரு சீரியல் ஷூட்டிங் நடக்கறதும் சேர்ந்துக்கிடுச்சு. குரங்கும் பாம்பும் காடுன்னா இருக்கத்தானே செய்யும்?. பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனவங்களை வழியனுப்பி விட வந்த சிலரே கூட எங்கிட்ட இதுபத்திக் கேட்டிருக்காங்க. ‘போங்கம்மா, போய் வேலையைப் பாருங்க, என்னையும் சேர்த்து பயமுறுத்தி விடாதீங்க’னு சொல்லி அனுப்பினேன்’ என்கிறார். 

சீஸன் 2 பிக்பாஸ் வீட்டுக்குள்ள பரபரக்குதோ இல்லையோ, வெளியே பரபரப்பாத்தான் இருக்கு!