ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்! | Kerala Government to auction Maraiyur Sandalwood in July first week

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (22/06/2018)

கடைசி தொடர்பு:11:00 (22/06/2018)

ஏலத்துக்குத் தயாராகும் மறையூர் சந்தன மரங்கள்!

ஏலம் விட தயாராக இருக்கும் கேரளாவின் மறையூர் சந்தனக்கட்டை.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மூணாறு − உடுமலைப்பேட்டை சாலையில் அமைந்துள்ளது மறையூர். மலைகள் சூழ அமைந்திருக்கும் மறையூரின் சிறப்புகளில் ஒன்று சந்தனக்காடு. உலகில், மலைகளில் உள்ள சந்தனக்காடுகளின் வரிசையில் மறையூர் சந்தனக்காடுக்கு முக்கியமான இடம் உண்டு. சுமார் 60 ஆயிரம் மரங்கள் கொண்ட ராட்சத சந்தனக்காடு அது. கடந்த காலங்களில் தொடர் சந்தன மரத் திருட்டு காரணமாக, கேரள அரசு, மறையூர் சந்தனக்காட்டுக்கு என பிரத்யேக வன அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மறையூர் சந்தனக்காட்டில் மரங்களை வெட்ட அனுமதி இல்லை.

வயது முதிர்ச்சியால் தானாக விழும் சந்தன மரங்கள் மற்றும் இயற்கைச் சீற்றத்தால் முறிந்து விழும் மரங்கள் சேகரிக்கப்பட்டு குடோனில் பாதுகாக்கப்படும். சந்தனக் கட்டைகளின் அளவைப் பொறுத்து அவை வருடத்துக்கு இரண்டு முறை ஏலம் விடப்படும். அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் ஏலம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஏலம் வரும் ஜுலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெட்டப்படாமல் தானாக விழும் மரங்களிலிருந்து சந்தனக்கட்டைகள் எடுக்கப்படுவதால் உலகச் சந்தையில் மறையூர் சந்தனத்துக்கு என தனி இடம் உண்டு. கடந்த காலங்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த சந்தனக் கட்டைகளை வாங்கி வந்தனர். இதனால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது. ஏலத்தில் கலந்துகொள்ள, வரும் ஜுலை 3-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். கேரள மாநிலத்தின் குருவாயூர் மற்றும் ஐயப்பன் கோவில்களுக்கு மட்டும் ஏலத்தில் சிறப்புச் சலுகை உண்டு. கடந்த ஜனவரியில் நடந்த ஏலத்தில் 34.5 டன் சந்தனக் கட்டைகள் ஏலம் விடப்பட்டன. தற்போது 90 டன் சந்தனக்கட்டைகள் ஏலம் விடத் தயாராக உள்ளன. உலகில் நடக்கும் இரண்டாவது மிகப்பெரிய சந்தனக்கட்டை ஏலம் இது என்பதால், சந்தன வர்த்தகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஒவ்வொரு முறையும் மறையூர் சந்தனக்கட்டை ஏலம் ஏற்படுத்துகிறது.