``வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு”- போலீஸில் சிக்கிய தி.மு.க மா.செ.

கந்துவட்டி பிரச்னையில் பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசிய கிருஷ்ணகிரி தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் சீனிவாசன். இவர் ஓசூரில் நிலம் தொடர்பான பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பது போன்ற சட்டத்துக்குப் புறம்பாக தொழில் செய்து வருகிறார். இதனால் ஓசூர் காவல் நிலையங்களில் சீனிவாசன் மீது பல்வேறு மிரட்டல் மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. 

கந்துவட்டி தொழில் செய்யும் சீனிவாசன்

இந்த நிலையில், தி.மு.க மாவட்ட துணைச் செயலாளரான சீனிவாசனிடம் ஓசூரைச் சேர்ந்த ரவி என்பவர் தொழில் செய்ய மீட்டர் வட்டிக்கு ரூ.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அசலுக்கு மேல் வட்டி கட்டி ஓய்ந்துபோன ரவியால் ஒரு கட்டத்தில் வட்டிப் பணத்தை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் காலதாமதம் ஆகவே ரவியிடம் தொலைபேசியில் வன்மமாகப் பேசியுள்ளார். அதன்பிறகு சீனிவாசனின் தொலைபேசி அழைப்பை ரவி தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் வட்டிப் பணம் ஒருநாள் லேட் ஆனாலும் நேரடியாக வீட்டுக்கே சென்று வட்டிப் பணத்தை வசூல் செய்து நெருக்கடி தந்துள்ளார். 

தொழிலும் மந்தமாக உள்ளதால் ஜூன் மாதத்துக்கான வட்டிப் பணத்தை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் காலதாமதம் ஆகவும், நேரடியாக ரவியின் மனைவி அரிப்ரியா பெண்களுக்காக நடத்தும் ஜிம்முக்குச் சென்ற சீனிவாசன், 'உன் கணவன் வட்டிக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு வட்டிப் பணம் கொடுக்க மட்டும் கசக்கிறதா? போன் போட்டால் போனை எடுக்க மாட்டேங்கிறான்' என்று ஏக வசனத்தில் பேசியுள்ளார். 'சரி உன் கணவன் வட்டிப் பணம் தரும் வரைக்கும் நீ என் வீட்டில் வந்து இரு' என்று வலுக்கட்டாயமாக அரிப்ரியாவிடம் எல்லை மீறி நடந்துகொள்ளவே பதறிப்போன அரிப்ரியா, ஓசூர்  டி.எஸ்.பி மீனாட்சியிடம் கண்ணீர் மல்கக் கதறியுள்ளார். உடனே டவுன் இன்ஸ்பெக்டர் ராஜசோமசுந்தரத்தை அழைத்த டி.எஸ்.பி மீனாட்சி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். விசாரணையில் நடந்த சம்பவம் உண்மை என்று அறிந்ததும் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கந்துவட்டிக் கொடுமையால் பல குடும்பங்கள் ஓசூரில் பாதித்துள்ள நிலையில் டி.எஸ்.பி மீனாட்சியின் அதிரடி நடவடிக்கையால் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!