வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (22/06/2018)

கடைசி தொடர்பு:11:40 (22/06/2018)

``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்?!" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி

``நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்.?!" − அரசுப் பள்ளி மாணவர்கள் கேள்வி.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது காந்திபுரம். கும்பக்கரை அருவியில் இருந்து வரும் தண்ணீர் பாம்பாறாக ஓடுகிறது. அதன் கரையில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளிக்குப் போதிய கட்டட வசதி இல்லை என்று பல வருடங்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மாணவர்கள், அப்பகுதி மக்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன் விளைவாக இருக்கும் பழைய பள்ளிக் கட்டடத்துக்கு அருகிலேயே புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டது.

புதிய, பழைய பள்ளிக் கட்டடம்

``கட்டி முடிக்கப்பட்டதோடு சரி, இன்று வரை திறந்தபாடில்லை. கட்டடம் இடியும் நிலையில் இருக்கிறது. புதிய கட்டடம் கட்டித்தாங்க என்று நடையா நடந்து புதிய கட்டடம் கட்டினார்கள். ஆனால், இன்று கட்டடம் கட்டி பூட்டி வைத்திருக்கிறார்கள். கட்டடத்தை திறங்கள் என்று கூறி அதிகாரிகளைச் சந்திக்க நடையாய் நடக்கிறோம்" என புலம்புகிறார்கள் அப்பகுதி மக்கள். ``இப்போ இருக்கும் கிளாஸ் ரூம், ரொம்பச் சின்னது. அதனால் இரண்டு வகுப்புகளும் ஒரே கிளாஸ் ரூமில் நடக்கும். நாங்கள் உட்காந்திருந்தால் எங்களுக்குப் பின்னால் வேறொரு வகுப்பு பசங்க, பொண்ணுங்க உட்கார்ந்திருப்பாங்க.

``அங்க நடத்துற பாடம் எங்களுக்குக் கேட்கும். எங்களுக்கு நடத்துற பாடம் அவங்களுக்கு கேட்கும். படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. பக்கத்துலையே புதுசா ஒரு கட்டடம் கட்டி பூட்டு போட்டு வைத்திருக்கிறார்கள். நாங்க எப்போ புது கிளாஸ் ரூம் போவோம்?" என அப்பாவியாக கேள்வி எழுப்புகிறார்கள் காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். அரசுப் பள்ளிகளின் மீதான மக்களுக்கு நம்பிக்கை உயர்ந்துவரும் சூழலில் இதுபோன்ற சம்பவம் அரசுப் பள்ளியை நோக்கிய மாணவர்களின் வருகையைத் தடை செய்யும். மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.