வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (22/06/2018)

கடைசி தொடர்பு:11:48 (22/06/2018)

பூரண கும்ப மரியாதை... யானை ஆசீர்வாதம்... ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு

திருச்சி வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

ஸ்டாலின்

இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீனின் துணைவியார் ஹாஜியானி லத்திபா பேகத்தை அவரின் இல்லத்தில் சென்று உடல் நலம் விசாரித்தார். அடுத்து திருச்சி தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இன்று காலை திருச்சி ஶ்ரீரங்கத்தில் பத்மசாலியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் இல்லத் திருமண விழா மற்றும் காதுகுத்து நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

சந்தனத்தை எடுக்கும் ஸ்டாலின்

காலை 8 மணியளவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜர் மடத்தில் இருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வரும் வழியில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள ரெங்கா கோபுரம் அருகே திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினை யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது. பின்னர் வெள்ளை கோபுரம் அருகே அகோபிலம் மடத்தைச் சேர்ந்த தேசிய ஆச்சாரியார் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து ஶ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு சுந்தர் பட்டர் தலைமையில் ராஜகோபுரம் அருகே, யானை மாலை அணிவிக்க, அடுத்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

ஸ்டாலினுக்கு வரவேற்பு

அப்போது, பேசிய மு.க.ஸ்டாலின்,  ``நமது நாட்டில் காது குத்தும் ஆட்சியாளர்கள்தான் உள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி ஶ்ரீரங்கம் வந்தபோது, நட்புறவோடு செயல்படுவோம் என்றார். ஆனால், கர்நாடகா சென்ற பிறகு அம்மாநிலத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்.  தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசுக்கு நாட்டைப்பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலையில்லை. மத்திய மோடி அரசு அதைவிட மோசம்.

ஸ்டாலினுக்கு ஆசீர்வாதம் அளிக்கும் யானை

தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் காவிரிக்காக பல போராட்டங்களை நடத்தியவர் கருணாநிதி. கர்நாடகாவுடன் நட்புறவு வைத்து தேவைப்படும் நீரை பெற்றுத் தந்தார் கருணாநிதி. ஆனால், தற்போது 7 ஆண்டாகியும் காவிரியில் இருந்து தண்ணீரைப் பெற முடியவில்லை. காவிரி நீரை பெற்றுத்தரக் கூடிய ஆட்சியாக தி.மு.க ஆட்சி இருந்தது. தமிழக மக்களின் ஜீவாதாரத்தை கண்டுகொள்ளாத வகையில் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. நீதிமன்றம் கூறியும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினரை நியமிக்காத கர்நாடக முதல்வர் குமாரசாமியை வன்மையாகக் கண்டிக்கிறோம். காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி முரணாக பேசி வருகிறார். காவிரி நீரை பெற்றுத்தரக் கூடிய ஆட்சியாக தி.மு.க ஆட்சி இருந்தது. எனவே, தி.மு.க தலைமையில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும். விரைவில் தேர்தல் வர உள்ளதால் நல்ல தீர்ப்பை மக்கள் பெற்றுத் தர வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க