`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை

 ஆசிரியர்

`சிறுவயதில் என்னுடைய குடும்பம் வறுமையில் வாடினாலும், லட்சியத்தோடு படித்து ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன்' என்று ஆசிரியர் பகவான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பகவான், இடமாற்றத்தைக் கண்டித்து மாணவ, மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் ஆசிரியர் பகவானைக் கட்டிப்பிடித்து கதறி அழுத சம்பவம் வைரலானது.  இதனால் ஆசிரியர் பகவானின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பகவானைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``மாணவ, மாணவிகளின் போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்? ''

 ``இந்தப் போராட்டத்துக்குப் பிறகு மாணவ, மாணவிகளின் அன்பை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆசிரியர் பணி என்பது சமுதாயத்தில் முக்கியமானது. ஆசிரியர்கள்தான் பலருக்கு ரோல் மாடலாக இருப்பார்கள். எனவே, ஆசிரியர்கள் தங்களின் பணிகளை சரியாகச் செய்தால் இந்த சமுதாயம் நிச்சயம் முன்னேறும்"

 ``நீங்கள் எப்போது ஆசிரியர் பணியில் சேர்ந்தீர்கள்?'' 

 ``2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றபிறகு 2014ல் பள்ளிப்பட்டு அருகில் வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு பணியாற்றுகிறேன். மாணவ, மாணவிகளை என்னுடைய தம்பி, தங்கைகளாகவே கருதினேன். இதனால்தான் அவர்களுடன் அன்பாகப் பழக முடிந்தது. அவர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கில பாடத்தைக் கற்றுக்கொடுத்தேன்"

``வழக்கமாக ஆங்கில பாடம் என்றாலே மாணவர்களுக்குப் பிடிக்காதே?'' 

``உண்மைதான். ஏனெனில் ஆங்கிலம் நம்முடைய தாய் மொழி அல்ல. வேறு மொழியை கற்க வேண்டும் என்றால் அதில் ஒரு விருப்பம், ஆர்வம் வேண்டும். அதிலும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் பாடப்பிரிவு என்றாலே ஒரு வெறுப்பு இருக்கும். அதைத்தான் முதலில் மாற்றினேன். ஆங்கிலப் பாடத்தை எளிமையாகக் கற்றுக் கொடுத்தேன். நான் எந்தப் பாடத்தையும் வகுப்பறையில் காட்சிப்படுத்தியே கற்பிப்பேன். இதனால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். ஆங்கிலம் என்பது மனித வாழ்க்கையோடு தொடர்புடையது. அதை புரிந்து, உணர்ந்து படித்தால் ஆங்கிலம் கடினமான பாடமாக இருக்காது.  இதனால், என்னுடைய பாடப்பிரிவு என்றாலே பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஒரு உற்சாகம் இருக்கும். வகுப்பறையிலும், பள்ளி வளாகத்திலும் மாணவர்களோடு மாணவனாகவே இருந்தேன். இதனால் கடந்த கல்வி ஆண்டில் எங்கள் பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள், 100 சதவிகிதம் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதைவிட பெரிய சந்தோஷம் வேறு எதுவுமில்லை"

ஆசிரியர்

`` உங்களுடைய  லட்சியம்?''

``திருத்தணி அருகில் உள்ள பொம்மராஜபேட்டைதான்  என்னுடைய சொந்த ஊர். அப்பா சந்தமந்தடி கோவிந்தராஜ். உடன் பிறந்தவர்கள் நான்குபேர். அண்ணன் ராஜேஷ்தான் என்னைப் படிக்க வைத்தார். திருத்தணியில் தொடக்கப்பள்ளி பயின்றபோது நான்காம் வகுப்பு ஆசிரியர் உமாபதிதான் என்னுடைய ரோல் மாடல். அவரால்தான் ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியம் எனக்குள் ஏற்பட்டது. அடுத்து, ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்தேன். சிறுவயது முதல் இலக்கியம் எனக்குப்பிடிக்கும். இதனால் மூன்றாண்டுகள் ஆங்கில இலக்கியம் படித்தேன். பிறகு, பிஎட் படித்தேன். என் விருப்பப்படி ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறேன். கல்லூரியில் படிக்கும்போது சரவணன், பிரபு, சாதனா, லதா, ஏஞ்சலின், சத்யபிரியா ஆகியோர் என்னுடைய ரோல் மாடல்களாக இருந்தனர். அதிலும் சரவணன் சாரின் கற்பித்தல் திறன்தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது"

உங்களிடம் படித்த மாணவ, மாணவிகள் இப்போதும் உங்களிடம் பேசுவார்களா? 

 ``ஆமாம். அதற்கு காரணம் நான் ஆசிரியர் அல்ல. அவர்களின் வீட்டில் ஒருவனாகவே பழகியுள்ளேன். பவித்ரா என்ற பெண், ப்ளஸ் டூ முடித்துவிட்டு நீட் தேர்வு தொடர்பாக என்னிடம் சில ஆலோசனைகளைக் கேட்டார். அவருக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறினேன். அதுபோல பல மாணவ, மாணவிகள் என்னிடம் இப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால்,  என்னை இடமாற்றம் செய்ததற்காக மாணவ, மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என்பதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை" 

ஆசிரியர்

 ``சமுத்திரகனி நடித்த 'சாட்டை' படத்தின் நிஜ ஹீரோவாக மாறியிருக்கிறீர்களே?''

 ``அது ஒரு நல்லப்படம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள நட்பை விவரிக்கும் கதை. எப்படி ஒரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதை அந்தப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். என்னுடைய கடமையைச் செய்தேன். அவ்வளவுதான்"

``உங்கள் இடமாற்றம் மாணவர்களின் பாசத்தால் நிறுத்தப்பட்டுள்ளதே?'' 

 ``இந்தப்பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளுடன் அன்பாகவும் சகஜமாகத்தான் பழகுவார்கள். இதுதான் எங்களின் பள்ளியின் வெற்றிக்கு முதல் காரணம். கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் சரியாக வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். மாணவர்களின் பாசத்தால் என்னுடைய இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் என்ன முடிவு எடுக்கிறார்களே அதற்கு கட்டுப்படுவேன். என்னுடைய நண்பர்கள், அதிகாரிகள் எல்லோரும் வாழ்த்து தெரிவித்தார்கள்" 

 ``உங்களைப் பற்றி சொல்லுங்களேன்! ''

``எனக்கு வயது 28. இன்னும் திருமணமாகவில்லை. கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வம். ஆனந்தவிகடன் சொல்வனம் பகுதியில் என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது. எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டதற்கு அப்பாதான் காரணம். அப்பாவுக்கு நெசவுத் தொழில். பாரம்பர்யமாக சித்த வைத்தியம் பார்க்கும் குடும்பம் என்னுடையது. வறுமையில் வாடினாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். இதனால்தான் வறுமையில் வாடும் மாணவ, மாணவிகளை ஆசிரியர் பணி மூலம் வழிகாட்டியாக இருக்கிறேன்" 
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!