'என் இதயத்தை உருக்குகிறது!' - ஹ்ருத்திக் ரோஷனை நெகிழ வைத்த ஆசிரியர் பகவான்

மாணவர்களின் அன்பில் நெகிழ வைத்த ஆங்கில ஆசிரியர் பகவான் குறித்து, ஏ.ஆர்.ரகுமானும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

பகவான் ஆசிரியர்

திருவள்ளூர் மாவட்டம், வெளியகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் கோபிந்த் பகவான். கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. அதில், திருத்தணிக்கு இடமாறுதல் பெற்றார் பகவான். இதையறிந்த மாணவர்கள், ' எங்களை விட்டுவிட்டு வேறு பள்ளிக்குச் செல்லக் கூடாது' என அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதனர்.

ஹிருத்திக் ரோஷன்

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். மாணவர்களில் அன்பில் திகைத்துப்போன ஆசிரியரும், கண்ணீர்விட்டு அழுதார். இந்தக் காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதையடுத்து, ஆசிரியரின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆசிரியர் பகவானை போகவிடாமல் தடுக்கும் மாணவிகள்

இதுகுறித்து, ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்தியை, `குரு சிஷ்யர்கள்' என்ற தலைப்பில் ரீ ட்வீட் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவரைத் தொடர்ந்து நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும், `ஆசிரியருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையிலான பிணைப்பைப் பார்க்கும்போது, என் இதயத்தை உருக்குகிறது' எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!