வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (22/06/2018)

கடைசி தொடர்பு:13:33 (22/06/2018)

``ரோடுக்காக... வயலு, வீடு, கெணறு எல்லாம் போகப் போகுதுங்க'' - சேலம் பெண் விவசாயி வேதனை!

சேலம் விவசாயிகளின் தூக்கத்தைப் பறித்து மிரட்டிக்கொண்டிருக்கிறது, பசுமை வழிச்சாலை திட்டம். `வயல்களை தார் ஊற்றிக் கொன்றுவிட்டு அப்புறமென்ன பசுமை வழி?' எனக் கொதிப்புடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தால் தங்கள் நிலங்களும் வீடுகளும் எப்போது பறிபோகுமோ என உயிரைக் கையில் பிடித்திருக்கும் சில விவசாயிகளிடம் பேசினேன். 

விவசாயி

 நாலிக்கல்பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி இவர்...

`நீங்க எங்கே இருந்து பேசறீங்க? என் நம்பர் எப்படிக் கிடைச்சது? நிறைய போன் வருதுங்க. பத்திரிகைன்னு சொல்றாங்க. உளவுத்துறைன்னு சொல்றாங்க. யாரை நம்பி எங்க கஷ்டத்தை சொல்றதுன்னே தெரியலைங்க'' என்கிற அவரின் குரலில் புலிக்கு  பயந்து ஓடிக்கொண்டிருக்கும் மான் போன்ற மிரட்சி.

``எங்களுக்கு மூன்றரை ஏக்கர் நிலம் இருக்குங்க. இதுல ரெண்டு ஏக்கர் நிலம், அந்த ரோடு போடற வழியில இருக்குதாம். அந்த ரெண்டு ஏக்கர்லதான் எங்க வீடும் கெணறும் இருக்கு. வத்தாத கெணறுங்க அது. அதுல தாரைக் கொட்டி மூடிட்டா மூணுப் புள்ளைகளை வெச்சுட்டு பொழப்புக்கு என்ன பண்ணுவோம்? அந்தக் கெணறையாவது விடச்சொல்லுங்க. மிச்சம் இருக்கும் துண்டு நிலத்தக் கொண்டாவது பொழச்சுக்குவோங்க. மறுபடியும் கெணறு வெட்டணும்னா, நகை நட்டெல்லாம் வித்தாதாங்க முடியும். நெல் விளைகிற வளமான பூமி. மீதமுள்ள நிலத்தில், தென்னை, பாக்கு, கொய்யா, மாம்பழம், கோகோ, எலுமிச்சைனு எங்க நிலம் எப்பவும் பசுமையா இருக்குமுங்க'' எனச் சொல்லும்போதே அவரின் குரல் அழுகையில் கம்முகிறது. 

கிணறு

``எங்க நிலத்துக்குப் பக்கத்துல இருக்கிற நிலத்தையெல்லாம் வீட்டு மனைக்கு வித்துப்புட்டாங்க. அங்கெல்லாம் இன்னமும் வீடு கட்டாம முள்ளுச்செடி மண்டிக் கிடக்குதுங்க. அதை உட்டுப்புட்டு, எங்க விளைச்சல் பூமியைப் பிடுங்குறாங்க. தெரியாமத்தான் கேட்கறேன், எல்லாரும் ஆர்கானிக் அரிசி வேணும்கிறீங்க; உரம் போடாத காய்கறி வேணும்கிறீங்க, நாட்டுக்கோழிதான் நல்லதுன்னு சாப்பிடுறீங்க, அதையெல்லாம் நாங்க தானே விதைச்சு, வளர்த்து கொடுக்கணும். ரோடு போட்டுட்டு அதுக்கெல்லாம் எங்கே போவீங்க? சிறுதானிய அரிசி வேணும்கிறீங்க. கம்பு, சோளம் விதைச்சா சோறு, தண்ணி இல்லாம பொழுதன்னிக்கும் குருவி முடுக்கிட்டு உட்கார்ந்து கிடக்கணும். நாட்டுக்கு வளர்ச்சி வேணும்னு சொல்றீங்க. விவசாயிங்களை விரட்டிட்டு என்னங்க வளர்ச்சியைப் பார்க்கப்போறீங்க? இந்த ரோடு பிரச்னை ஆரம்பிச்சதிலிருந்தே ரொம்ப மனஉளைச்சலா இருக்குங்க. திடீர்னு திடீர்னு யார் யாரோ வர்றாங்க. வீட்டைச் சுத்தி அளவெடுக்கறாங்க'' என்றவர், இன்றைய அரசாங்கத்தின் மீதான பயத்தையும் சொல்கிறார். 

``நாங்க எதுனா பத்திரிகையில் பேசி, எங்களை பிடிச்சுட்டுப் போயிட்டா எங்க புள்ளைகள் என்ன பண்ணுங்க? பூலாவரிக்காரர் ஒருத்தர் யதார்த்தமா டி.வியில பேசப்போக, விடிஞ்சும் விடியாததுமா போலீஸு கதவைத் தட்டிச்சு. சட்டையைக்கூட போடவிடாம ஜீப்புல ஏத்திட்டுப் போயிடுச்சு. எங்க தோட்டம், கெணறு போட்டாவை மட்டும் அனுப்பி வைக்கிறேங்க. என் படம் வேண்டாங்க'' என்கிறவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தன்னைப் போன்ற விவசாயிகளுக்குக் கிடைத்த ஏமாற்றத்தையும் சொன்னார்.

``கலெக்டர் ரோகிணி அம்மாவைப் பத்தி பெருமையா நினைச்சுட்டு இருந்தோம்க. ஒரு நியாயத்துக்காகப் போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது, அந்தம்மாவுக்கு எங்க பேச்சைக் கேட்கவே நேரமில்லைன்னு. என்னை மாதிரி  நிலம், வீடு எல்லாத்தையும் இழந்தவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க. ஏக்கருக்கு 8 லட்சம் தருவாங்களாம். அந்தக் காசுல மூணு புள்ளைகளை வெச்சுட்டு எவ்வளவு காலம் வாழமுடியும்? விவசாய நிலத்தை பிளாட் போட்டு நல்ல விலைக்கு வித்தவங்க எல்லாம், இப்போ எங்களைப் பார்த்துச் சிரிக்கிறாங்க. மல்லையாங்கிறவன் கடன் வாங்கிட்டு ஓடிட்டான்னு டி.வி.யில் பார்க்குறேன். அவனையெல்லாம் வுட்டுட்டு, எங்க பொழப்பைக் கெடுக்குது அரசு. என்னவோங்க, பத்திரிகைக்காரங்க நீங்கதான் அரசாங்கத்தைக் கேட்கணும்'' என்கிறவர் குரலில் சில துளி நம்பிக்கை ஒட்டியிருக்கிறது.

பழனிச்சாமி, கெஜநாயக்கன்பட்டி

``ஆனந்த விகடனிலிருந்து பேசறீங்களா மேடம்? என்னோட அஞ்சு ஏக்கர்  நிலத்துல மூணு ஏக்கர் நிலத்தை எடுத்துக்கப் போறாங்களாம். முப்போகம் நெல்லு விளையுற பூமிங்க. அதுல ரோடு போடுவேங்கிறாங்க. நான் கெமிக்கல் உரம் போடாம ஆர்கானிக் உரம் போட்டுதான் விவசாயம் பண்ணிட்டிருக்கேங்க. எனக்கு உடம்புக்கும் சொகமில்லீங்க. கிட்னில கேன்சர். சர்க்கரை வியாதியால ஒரு காலை எடுத்துட்டாங்க. என் நிலத்தைச் சுத்திலும் தருசு நிலங்களா கிடக்கு. என் நிலத்துக்கும் தரிசு நிலத்துக்கான பணம்தான் தருவாங்களா, விளைநிலத்துக்கான பணம் தருவாங்களான்னே தெரியலை. இதையெல்லாம் பத்திரிகையில சொல்லவும் பயமா இருக்கு. தூத்துக்குடியில் நடந்ததை நினைச்சு பயமா இருக்குங்க. எங்க ஊர்ல யாரும் பத்திரிகையில பேச மாட்டாங்க'' என்று படப்படப்பாகப் பேசிவிட்டு சட்டென போனை வைத்துவிட்டார். 

 


டிரெண்டிங் @ விகடன்