வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (22/06/2018)

கடைசி தொடர்பு:14:10 (22/06/2018)

``அத்தை என்னைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?" - ரகசியம் சொன்ன ஜெ.தீபா!

``அத்தை என்னைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?

`தமிழக அரசியலில், ஒரு ரவுண்ட் வருவார்!' என்று கணிக்கப்பட்ட `எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை'யின் நிறுவனர் - பொதுச்செயலாளர் ஜெ.தீபா தற்போது பரபரப்பு குறைந்து காணப்படுகிறார்!

இந்நிலையில், பேரவையைக் கட்சியாக மாற்றப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதுகுறித்து அவருடன் பேசினோம்....
 
`` `எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை'யை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றவிருக்கிறோம்... என்கிறீர்களே... வணிகர் சங்கப் பேரவையோடு பெயர் குழப்பம் எதுவும் வந்துவிட்டதா...?''

``அதெல்லாம் ஒரு குழப்பமும் வரவில்லை. பேரவை என்றால், வணிகர் சங்கப் பேரவை மட்டும்தானா... தமிழர் பேரவைகூட இருக்கிறதே...! 

தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் சமூகச் செயல்பாடுகளுக்காகவும் ஓர் அடையாளமாகத்தான் முதலில், `பேரவை' என்ற பெயரில் அமைப்பு ஆரம்பித்தோம். அதன்பிறகு அரசியலில் ஈடுபட வேண்டிய சூழல் வந்ததால், இப்போது புதிதாகக் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறோம்.''

``உங்கள் நண்பர் ராஜாவும் மாதவனும் பொதுவெளியிலேயே மோதிக்கொண்டனர். இப்போது அவர்களது பிரச்னைகள் எல்லாம் எந்த அளவில் இருக்கின்றன?''

``ஏதோ ஓரிருமுறை இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் நடந்திருக்கலாம்.... போயஸ்கார்டனில், அன்றையச் சூழல் அப்படி. 
பேச்சுவார்த்தை எனக்கூறி எங்களை அழைத்தவர்கள் மோசடி செய்ய முயன்ற விஷயங்கள் குறித்து போயஸ்கார்டனுக்கு வெளியில் நின்றிருந்த யாருக்கும் எதுவும் தெரியாது. சம்பந்தப்பட்டவர்களும் உண்மையை வெளியில் சொல்லப்போவதில்லை. இந்தச் சூழலில், நான்தான் எல்லாவற்றையும் சொல்லியாகவேண்டும்.''

ஜெயலலிதா

``குடும்ப ரீதியாக ஜெயலலிதாவுடனான நெகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?''

``நிறைய... அத்தையோட செல்லப் பெயர் அம்மு; அப்பாவோட செல்லப்பெயர் பாப்பு! வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னரும்கூட அத்தை, என் அப்பாவை `பாப்பு' என்றுதான் அழைப்பார்.

அத்தை சிறுவயதுக் குழந்தையாக இருந்தபோது, ரொம்பவும் பயந்த சுபாவம் உடையவராக இருந்தார் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். சாலையைக் கடக்கக்கூட பயப்படும் அத்தையை அப்பாதான் கையைப் பிடித்துக்கொண்டு க்ராஸ் செய்வாராம். ஆனால், பின்னாளில் தைரியமிக்கப் பெண்மணியாக அவர் உயர்ந்த நிலைக்கு வந்திருந்தபோது, `இந்திய அரசியலில், இந்திராவுக்குப் பிறகு துணிச்சலான பெண் தலைவர் என்றால், என் தங்கைதான். அவரது தகுதிக்குப் பிரதமராக வரவேண்டும்' என்று அப்பா அடிக்கடி சொல்வார்.  

பெங்களூரு பள்ளி நாள்களில், அப்பா சிறந்த விளையாட்டு வீரர். ஆனால், வீட்டில் விளையாடுகிறபோது தோற்றுவிட்டால், ஒப்புக்கொள்ளாமல் அழுதுவிடுவாராம் அத்தை. அதனாலேயே நிறைய சமயங்களில் அப்பாவே விட்டுக்கொடுத்துவிடுவாராம்!''

``ஸ்டெர்லைட் போராட்டம் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், `சமூக விரோதிகள்' என்று பேசியதற்கு பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறதே... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

``தமிழ்நாடு என்று பார்க்கும்போது, `நம் மக்கள்தாம்' என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கையில் நம் தமிழ் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்களோ... அதேபோன்றதொரு சூழ்நிலை இங்கேயும் வந்துவிட்டதோ என்று பயப்படும்படியான நிலைதான் இருக்கிறது. 
நம்முடைய உரிமையைப் பெற வேண்டுமானால், போராடித்தானே ஆகவேண்டும். போராடாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்குமா? ரஜினிகாந்தின் பேச்சு, அரசின் குரலாக ஒலித்ததாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில், `எல்லாவற்றுக்கும் போராடிக்கொண்டிருந்தால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்' என்கிறார். ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகுதான் தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்றிவிட்டார்களே.... அதனால்தானே மக்கள் இப்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள்...!''

ஜெ.தீபா

`` `நான் யாரையும் காப்பியடிக்கவில்லை' என்கிறீர்கள். ஆனால், ஆரம்பத்தில், `அத்தை ஜெயலலிதா' போல் தோன்றிய நீங்கள் இப்போது... 'அந்தக்கால ஜெயலலிதா' போல் யூத்தாக மாறியிருக்கிறீர்களே...?''

``காஸ்ட்யூம் விஷயத்தில், எனக்கு ஆர்வம் அதிகம்... அதனாலேயே அடிக்கடி மாற்றங்களை செய்துகொண்டே இருப்பேன். மற்றபடி ஜெயலலிதாவைப் போல் நான் உடைகள் அணியவில்லை. 70 விழுக்காடு அவரைப்போன்றே உருவ அமைப்பு எனக்கு. `என்னைப்போலவே இருக்கிறாள்' என்று அத்தையே (ஜெயலலிதா) நிறைய முறை சொல்லியிருக்கிறார்.  

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், நான் அணிந்திருக்கும் ஆடைகள் நன்றாக இருந்தால், பாராட்டுவதோடு `இந்த உடை எங்கே வாங்கினாய்?' என்றெல்லாம்கூட கேட்டு விசாரித்து, நிறைய சல்வார் கமிஸ் உடைகளை எனக்குப் பரிசளித்திருக்கிறார் அத்தை. ஒருமுறை நான் ஹேர் கட் செய்திருந்ததைக் கண்டுபிடித்துப் பாராட்டினார். 

எனக்கு ரொம்பவும் பிடித்த உடை, ஜீன்ஸ் அண்டு கேஷுவல்ஸ்தான். அடிப்படையில், நானும் ஒரு ஜர்னலிஸ்ட்டாக இருந்ததினால் இந்த உடை எனக்கு ரொம்பவே பொருந்திப்போனது. ஆனாலும், இப்போது வெளியே பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, பாரம்பர்ய உடையான சேலைதான் கட்டிக்கொள்வேன்.''

``உங்கள் சகோதரர் தீபக் மீதிருந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டனவா...?''

``சசிகலா குடும்பத்தோடு தீபக் நெருக்கமானதிலிருந்தே, எங்கள் இருவருக்கிடையேயான சகோதர உறவு பலம் இழந்துபோய்விட்டது!''


டிரெண்டிங் @ விகடன்