வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (22/06/2018)

கடைசி தொடர்பு:15:05 (22/06/2018)

நள்ளிரவு கைதால் பெண்கள் அச்சம்! - போலீஸைக் கண்டித்து தூத்துக்குடியில் வக்கீல்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் நள்ளிரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து ஆண்களைப் போலீஸார் கைது செய்து வருவதைக் கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வக்கீல்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் பனிமய அன்னை ஆலயத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இச் சம்பவத்துக்கு எதிராக பல கட்சியினர், பல அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரிடையே பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து கடந்த 18-ம் தேதி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று, தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிமன்றம் முன்பு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் (பொறுப்பு) திலக், ``தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வெறும் கண்துடைப்புதான். இது ஸ்டெர்லைட் ஆலைக்குச் சாதகமான ஓர் ஆணை.

இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்றால், தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். இதுகுறித்து சட்டமன்றத்திலும் சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும். இதுகுறித்து பல அமைப்புகள் வலியுறுத்தியும் இன்னமும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஸ்டெர்லைட் ஆலைக்குச் சாதகமாக செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.

கலவரத்தை தூண்டியதாகவும் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து ஆண்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள்  மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பல குடும்பங்கள் ஊரையே காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இதுபோன்ற கைது நடவடிக்கை மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் ஆகிய நிலையிலும், தற்போது வரை தூத்துக்குடியில் போலீஸார் பாதுகாப்பு விலக்கப்படவில்லை. போலீஸாரின் இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையை போலீஸார் கைவிட வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க