கொள்ளையர்களுக்குப் பயந்து இடத்தை மாற்றிவைத்த வீட்டு ஓனர்! - நகை, வெள்ளி, பணத்தை இழந்த சோகம்

கொள்ளை

சென்னை அண்ணாநகரில் கொள்ளையர்களுக்குப் பயந்து கட்டிலுக்கு கீழ் வைத்த 36 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி, 25,000 ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

சென்னை, அண்ணாநகர் மேற்கு, ஏசியாட் காலனியைச் சேர்ந்தவர் வேதவள்ளி. இவர், வருமானவரித்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் பார்த்தசாரதி, தனியார் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடன் 100 வயதாகும் லலிதாபாய் என்பவரும் குடியிருந்துவருகிறார். 

இந்த நிலையில், கடந்த 8.6.2018ல் வேதவள்ளி, பெங்களூரு சென்றுவிட்டார். லலிதாபாய், தாம்பரத்தில் உள்ள பேத்தி வீட்டுக்கு கடந்த 9-ம் தேதி சென்றுவிட்டார். பார்த்தசாரதியும் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். இதனால், வீட்டில் யாரும் இல்லை. பெங்களூரிலிருந்து நேற்று மாலை, வேதவள்ளி, வீட்டுக்குத் திரும்பினார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் பொருள்கள் சிதறிகிடந்தன.

நகை கொள்ளை போன வீடு

படுக்கையறையின் கீழ் வைத்திருந்த 36 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தன. மேலும், 2 கிலோ வெள்ளி பொருள்கள், 25,000 ரூபாய் ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வேதவள்ளி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருமங்கலம் ஏசியாட் காலனியில் 312 வீடுகள் உள்ளன. 16 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. முதல் தளத்தில்தான் வேதவள்ளி வசித்துவருகிறார். கொள்ளையர்களுக்குப் பயந்து பீரோவில் நகைகளை வைக்காமல் படுக்கையறையில் உள்ள கட்டிலுக்கு கீழ் நகைகளை வைத்துள்ளனர். ஆனால், அதையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.  ஏசியாட் காலனி குடியிருப்புக்குள் அவர்கள் நுழையும் காட்சிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அதன்மூலம் விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!