வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (22/06/2018)

கடைசி தொடர்பு:15:20 (22/06/2018)

ஜம்மு - காஷ்மீரில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்?

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அம்மாநில காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர்

அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அந்தப் பகுதியை ஜம்மு - காஷ்மீர் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இடையில் அதிகாலை 5.30 மணி முதல் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பிருக்கலாம் என அம்மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.வாய்ட் தெரிவித்துள்ளார். அதிகாலை தொடங்கிய துப்பாக்கிச் சண்டை தற்போது வரை நீடித்து வருகிறது. இதில், தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், பொதுமக்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் காலூன்றவில்லை என்று அரசுத் தரப்பில் இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக அம்மாநில காவல்துறை தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக் கூடும் என்பதால், பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.