வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (22/06/2018)

கடைசி தொடர்பு:16:00 (22/06/2018)

அணை திறப்பு அரசியல்.. அமைச்சரிடம் எம்.எல்.ஏ வாக்குவாதம்!

நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக ராமநதி, கொடுமுடியாறு, கடனாநதி, மற்றும் அடவிநயினார் அணைகள் திறக்கப்பட்டன. கடையம் அருகே உள்ள ராமநதி அணையை திறக்கச் சென்ற ராஜலட்சுமியை சட்டமன்ற உறுப்பினரான பூங்கோதை ஆலடிஅருணா முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக ராமநதி, கொடுமுடியாறு, கடனாநதி, மற்றும் அடவிநயினார் அணைகள் திறக்கப்பட்டன. கடையம் அருகே உள்ள ராமநதி அணையை திறக்கச் சென்ற அமைச்சர் ராஜலட்சுமியை சட்டமன்ற உறுப்பினரான பூங்கோதை ஆலடிஅருணா முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பூங்கோதை வாக்குவாதம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளை கார் சாகுபடிக்காக திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம் கடையம் அருகே 81 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைக்கச் சென்றார். இது குறித்த தகவல் முறைப்படி அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான பூங்கோதைக்கு தெரியப்படுத்தவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அவர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார்.

அணையைத் திறப்பதற்கு அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி-க்களான முத்துக்கருப்பன், பிரபாகரன் மற்றும் கலெக்டர் ஷில்பா பிரபாகர்சதீஷ் ஆகியோர் சென்றனர். அப்போது, அங்கு சென்ற பூங்கோதை, ‘தொகுதியின் எம்.எல்.ஏ-வான எனக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. அதோடு, இந்த அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்தபோதிலும், 60 அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. அணையைத் தூர் வார வேண்டும் என்று பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால், 4000 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்தப் பகுதியில் 800 முதல் 2000 ஏக்கர் வரை மட்டுமே பாசன வசதி கிடைக்கிறது’ என்று அமைச்சரிடம் வாக்குவாதம் செய்தார்.

அதைத் தொடர்ந்து அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள். பின்னர், அணை திறக்கும் இடத்துக்குச் செல்லும் வழியில், ‘கலைஞர் வாழ்க’ என பூங்கோதை கோஷமிட்டதால், அமைச்சரும் எம்.பி-க்களும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த அ.தி.மு.க-வினர், ‘அம்மா வாழ்க’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் அதிகாரிகள் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அணையைத் திறக்கும் நிகழ்ச்சியில் பூங்கோதை கலந்துகொண்டார். 

அணை திறப்பு

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் எம்.பி-க்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வும் கலந்து கொண்ட சம்பவம் அங்கு வந்திருந்த இரு கட்சிகளின் தொண்டர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதேபோல், களக்காடு கொடுமுடியாறு அணையை ஐ.எஸ்.இன்பதுரை திறந்து வைத்தார். தென்காசி அருகே உள்ள அடவிநயினார் அணையில் தற்போது 122 அடி நீர்மட்டம் உள்ளது. இந்த அணையை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் திறந்து வைத்தார். கடனாநதி அணையை அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ-வான முருகையா பாண்டியன் திறந்து வைத்தார்.