வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (22/06/2018)

கடைசி தொடர்பு:17:12 (22/06/2018)

கரும்பு ஜூஸுடன் 37 வகை மூலிகைச் சாறுகளைக் கொடுக்கும் வியாபாரி! படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்

பணத்திற்காக இதை செய்யவில்லை மக்களோட நலனுக்காகவும், என் மனதின் திருப்திக்காகவும் தான் என அக்கறையாக சொல்லும் பண்டரிநாதன்.

``கரும்பு ஜூஸ் குடிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அது, உடலுக்குப் பல நன்மைகளையும் தருகிறது. கரும்பு ஜூஸோடு மூலிகைச் சாற்றையும் சேர்த்துக் குடித்தால் அதன் நன்மைகள் இன்னும் பல மடங்காகும். மனிதர்கள் நோய்கள் வருவதிலிருந்து காத்துக் கொள்வதோடு எப்போதும் புத்துணர்ச்சியோடும் இருக்க வைக்கும். அதனால் கரும்புச் சாற்றோடு  37 வகையான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து ஜீஸாக விற்பனை செய்கிறேன். பணத்துக்காக இதைச் செய்யவில்லை. மக்களோட நலனுக்காகவும், என் மனதின்  திருப்திக்காகவும்தான்'' என அக்கறையாகச் சொல்கிறார் மன்னார்குடியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வரும் பண்டரிநாதன்.

பண்டரிநாதன்

மன்னார்குடி மேலராஜவீதியில் சாலையோரத்தில் கரும்புச் சாறு கடை வைத்திருக்கிறார் பண்டரிநாதன். இவர் பச்சை உடை அணிந்து எப்போதும் பரபர வென இருக்கிறார். இவர் கடையில் கரும்பு ஜூஸ் குடிப்பதற்கு காரில் வரும் பெரியவர்கள் தொடங்கி சைக்கிளில் வரும் சிறுவர்கள் வரை  பெரிய கூட்டம் எப்போதும் நின்றுகொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் நிமிர்ந்து பார்த்துப் பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் பம்பரமாய் சுழன்று கொண்டே உங்களுக்கு என்ன மூலிகை ஜூஸ் வேணும் எனக் கேட்க முடக்கத்தான் கொடுங்க என்கிறார் வாடிக்கையாளர். உடனே முடக்கத்தான் இலையை எடுத்து கரும்போடு சேர்த்து மிஷினுக்குள் அழுத்துகிறார். சற்று நேரத்தில் கரும்போடு சேர்ந்து முடக்கத்தானும் சாறாகக் கொட்டுகிறது. இந்தாங்க சார் என முகம் மலர்ந்து கொடுக்கிறார். அதில் அவரின் ஆத்மதிருப்தி தெரிகிறது.

பண்டரிநாதனுக்கு உதவியாக அவரது மகன் விவேக்ஹரிஹரன் மற்றும்  வேலைக்கு இரண்டு பேரும் இருக்கிறார்கள். இவற்றை வியப்போடு பார்த்த நாம் நமக்கு இரண்டு கரும்பு ஜூஸ் ஆர்டர் செய்தோம். `தம்பி என்ன மூலிகை சேர்க்கணும்' என்றவர், ``சோற்று கற்றாழை சாப்பிட்டா வயிற்றுப் புண், உடல் சூடு, அம்மை போன்ற நோய்கள் வராது. கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி சாப்பிட்டா கண் சம்பந்தபட்ட நோய்கள் நெருங்காது. வாழைத்தண்டு உடல் பருமனைக் குறைப்பதோடு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து காக்கும். நெல்லிக்காய் ரத்தத்தைச் சுத்தம் செய்வதோடு ஆயுளையும் நீடிப்பு செய்யும்'' என ஒவ்வொரு மூலிகையும் தரும் பலன்களைப் பட்டியலிட்டதோடு நமக்கு என்ன தேவையோ அதை மகிழ்ச்சியுடன் ரெடி செய்தும் தருகிறார்.

ஜூஸ் போடும் பண்டரிநாதன்

ஜூஸைக் குடித்துக்கொண்டே அவரிடம் பேசினோம். ``நான் சின்னப் பையனா இருக்கும்போது எங்க அம்மா, பாட்டியெல்லாம் உடம்புக்கு ஏதாவது நோவுனா உடனே டாக்டர்கிட்ட போகமாட்டாங்க. அப்ப டாக்டர்களும் குறைவு. ஆங்கில மருந்துகளின் பயன்பாடும் ரொம்பவே குறைவாக இருந்தது. அந்தக் காலகட்டங்களில் உடல் நலக் குறைபாடு ஏற்படும் போதெல்லாம், உடனே அந்த மூலிகையைப் பறித்து வந்து நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுப்பார்கள். உடனே  நோயும் குணமாகும். சர்க்கரை கசப்புக்கு இனிப்பு சேர்த்த மாதிரியும் இருக்கும் மருந்தையும் எளிதாகச் சாப்பிடலாம். ஆனால், இன்றைக்கு நம் மூலிகையின் மகத்துவத்தை மறந்துவிட்டு எல்லோரும் ரசாயனம் கலந்த மருந்துகளின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். நான் இந்தக் கடையை 15 வருடத்துக்கு மேல் நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் எல்லோரையும் போல் வெறும் கரும்பு ஜூஸ் மட்டும் விற்பனை செய்து வந்தேன். அப்புறம் எனக்குள், `என்ன வெறும் காசுக்காக மட்டும் வேலை செய்கிறோம். இதை ஒரு சேவையாகவும் செய்ய வேண்டும்' என எண்ணம் வந்தது.

உடனே எனக்கு நினைவு வந்தது என் அம்மாவும், பாட்டியும் பயன்படுத்திய மூலிகைகள்தாம். இதற்கு இந்த மூலிகையைச் சாப்பிட்டால் இது மாதிரி பயன்கள் கிடைக்கும் என என் அம்மா சொல்லிக் கொடுத்த நினைவுகளோடு சேர்த்து சில புத்தகங்களையும் படித்து நிறைய தெரிந்துகொண்டு அதன் பிறகு கரும்புச் சாற்றோடு சேர்த்து மூலிகைச் சாற்றையும் கொடுக்க ஆரம்பித்தேன். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இப்படிதான் வியாபாரம் செய்கிறேன். பொன்னாங்கண்ணி, புதினா, வாதம் முடக்கி, முடக்கத்தான், துளசி, சோற்றுக்கற்றாழை, நெல்லிக்காய், மொசு மொசக்கை, சிறியா நங்கை, வெள்ளைத் தாமரை, சிறு நெருஞ்சி, ஆடுதோட இலை போன்ற 37 வகையான பொருள்களை பயன்படுத்தி கரும்பு ஜூஸோடு சேர்த்துத் தருகிறேன். இதில் எதைக் கேட்கிறார்களோ அதை கரும்போடு சேர்த்துச் சாறாக்கிக் கொடுப்பேன். தினமும் இவை அனைத்தும் கிடைக்கும். காலை 9 மணிக்குத் தொடங்கும். வியாபாரம்  மாலை 4 மணி வரை நடைபெறும்.

மூலிகை இலைகள்

மனதோட திருப்திக்காகவும், மக்களோட நலனுக்காகவும் செய்கிற வியாபாரம் என்பதால் வருமானத்தைப் பெருசா நினைச்சுச் செய்யலை. எல்லாச் செலவும் போக ஒரு நாளைக்கு 500 ரூபாய் லாபம் கிடைக்கும். சில நாள்கள் இன்னும் அதிகமாகவும் கிடைக்கும். வருகிறவர்கள் என்னை மனதாரப் பாராட்டிச் செல்வதுதான் என்னை இன்னும் இதைச் செய்ய வைக்கிறது. எப்போதும் பசுமையைக் குறிக்கும் வகையில் பச்சை உடையில்தான் இருப்பேன். ரசாயனம் கலக்காத மண் நல்ல நிலமாகப் பசுமையாக இருக்கும். பசுமையான சூழலில் வாழும்  மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே, பூமியைப் பசுமையாக வைத்திருந்தால் மனிதன் நன்றாக வாழலாம். இதை உணர்த்தவே இந்தப் பச்சை உடை'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க