'டெல்லி எய்ம்ஸுக்கு இணையாக தோப்பூர் எய்ம்ஸ் இருக்கும்'-அடித்துச்சொல்லும் விஜயபாஸ்கர் | Vijaya bhaskar about madurai AIIMS

வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (22/06/2018)

கடைசி தொடர்பு:17:27 (22/06/2018)

'டெல்லி எய்ம்ஸுக்கு இணையாக தோப்பூர் எய்ம்ஸ் இருக்கும்'-அடித்துச்சொல்லும் விஜயபாஸ்கர்

அமைச்சர்களுடன் விஜயபாஸ்கர்

'மதுரை மாவட்டம் தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவ மையம் டெல்லிக்கு இணையாக அமையும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை இங்கே அமையும்' என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர உள்ளநிலையில், அதைக் கொண்டுவர நாங்கள்தான் முயற்சித்தோம், போராடினோம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். அ.தி.மு.க-வினர் தங்கள் முயற்சியால் வந்தது என்று தெரிவித்துவந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரும் முதல்கட்ட பணிகள் முடிந்துள்ளன. பல்வேறு நபர்கள், தொடர்ந்து தோப்பூருக்குச் சென்று பார்வையிட்ட நிலையில், இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

பிறகு,செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், 'ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றும் விதமாக பிரதமர், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் எனத் அறிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க தொடர்ந்து முதலமைச்சர் மத்திய அரசிடம் வலியுறுத்திவந்தார். வளர்ந்த மாநிலமாக தமிழகம் இருந்தாலும், தமிழகத்தில் எய்ம்ஸ் அமைய மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழக மக்களுக்குக் கிடைத்த பெருமை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு அமையும். ஏற்கெனவே, மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள 5 நிபந்தனைகளை நிறைவேற்ற தயார் நிலையில் உள்ளோம். 198.27 ஏக்கர் நிலம் மொத்தமாக கையகப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலூர் குடிநீர்த் திட்டத்திலிருந்து தேவையான அளவு குடிநீர் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

இரு வழித் தடங்களில் 20 மெகாவாட் மின்சாரம் அளிக்கத் தேவையான பணிகள் தொடங்க உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்திலிருந்து நான்கு வழிச் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலைப் பாதை அமைக்க தயார் நிலையில் உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்களை 60 அடி தூரத்துக்கு தள்ளி அமைக்க அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அனைத்து நிபந்தனைகளையும் விரைவில் நிறைவேற்றி, மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தி, தாமதமின்றி  எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஆக்கப்பூர்வமான பணிகள் தொடங்கி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும்.

இங்கு அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 50 சிறப்பு மருத்துவப் பிரிவுகள் செயல்படும். 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக எய்ம்ஸ் இருக்கும். 100 மருத்துவப் படிப்பு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி, 60 செவிலியர் இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி, இந்த எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமையும். 100 சிறப்பு மருத்துவர்கள் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிவார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனை இருக்கும்'' எனத் தெரிவித்தார்.