பேருந்து நிலையத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை! போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவில்பட்டியில், பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை பேருந்து நிலையத்தில் கிடந்ததால், கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியில், பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை பேருந்து நிலையத்தில் கிடந்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில்,  மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் வில்லிசேரி. இந்த ஊருக்கான பேருந்து நிறுத்தம், ஊரின் முன்பகுதியான தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இன்று காலை அங்கு வந்தவர்களுக்கு, பேருந்து நிறுத்தத்தில் ஒரு  பச்சிளம்குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே,  அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து 15 நாள்களே ஆன  பச்சிளம் பெண் குழந்தை, வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 பொதுமக்கள், உடனே கயத்தார் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும்  போலீஸார் விரைந்து வந்து அப்பெண் குழந்தையை மீட்டு, கோவில்பட்டி  அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நன்றாக இருப்பதாகத் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர் யார்? ஏன் இங்கு விட்டுச்சென்றனர்  என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவில்பட்டி பகுதியில் இதேபோல பெண் குழந்தைகள் அநாதைகளாக வீசப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த, மார்ச் மாதம் 1-ம் தேதி, கோவில்பட்டியிலிருந்து  கழுகுமலை செல்லும் சாலையில், சங்கரலிங்கபுரம் என்ற ஊரின் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள முட்புதரில், பிறந்து 5 மணி நேரமேயான, தொப்புள் கொடிகூட அகற்றப்படாத நிலையில்  பெண்குழந்தை ஒன்று சாக்கில் வைத்து தூக்கி வீசப்பட்டிருந்தது. பெண் குழந்தைகள், இவ்வாறு மனசாட்சியே இல்லாமல் தூக்கி வீசப்படுவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!