வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (22/06/2018)

கடைசி தொடர்பு:17:45 (22/06/2018)

'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்

''குழந்தை கடத்தல்காரர்கள் என யாரையேனும் சந்தேகப்பட்டால், அவர்களை அடித்துத் துன்புறுத்தாமல், பிடித்து வைத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவியுங்கள்'' என பொதுமக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி., திஷாமித்தல் வேண்டுகோள் வைத்துள்ளார்.

பெரம்பலூர் போலீஸ் எஸ்பி அலுவலகம்

தமிழகம் முழுவதும் குழந்தைக் கடத்தல் வதந்திகள் காட்டுத்தீ போல பரவிக்கொண்டிருக்கிறது.அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். பாளையம் கிராமத்தில், கடந்த 14-ம்தேதி சாலையோரமுள்ள தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர்கள் இருவர், அங்கிருந்த குழந்தை ஒன்றிடம் பேச முற்பட்டதால் சந்தேகமடைந்தனர். அதே இளைஞர்கள், மறுநாளும் பாளையம் கிராமத்துக்கு வந்ததால், மேலும் சந்தேகமடைந்து இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்து, பிள்ளையார் கோயிலில் அமர வைத்தனர். தகவலறிந்து, பெரம்பலூர் போலீஸார் இருவரையும் மீட்டுச்சென்றனர். அவர்கள், பழைய துணிகளை வாங்க வந்த வடமாநிலத்து இளைஞர்கள் என்பது விசாரணையில் தெரியவந்ததால், பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றனர். அதேபோல, பாளையம் கிராமத்தில் குழந்தையைக் கடத்த வந்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரை சரமாரியாக அடித்திருக்கிறார்கள். இதேபோல, பல்வேறு கிராமங்களில் குழந்தைகளைக் கடத்தும் வடமாநிலத்தவர், தமிழக கிராமங்களில் ஊடுருவி இருப்பதாக வாட்ஸ்அப் வதந்திகளால், குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் பேசப்பட்டுவருகின்றன.

இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திஷாமித்தல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் குழந்தைத் திருடரென சந்தேகிக்கப்படும் நபர்களாக யாரேனும் தென்பட்டால், அவர்களை அடிக்காமல் உதைக்காமல், துன்புறுத்தாமல் பிடித்துவைத்து, அருகிலுள்ள போலீஸாரிடம் தகவல் தெரிவித்தால் போதும். பெரம்பலூர் ஸ்டேஷனுக்கு 04328-277120, 9498100692 என்ற எண்களிலும், பாடாலூர் ஸ்டேஷனுக்கு 04328-267266, 9498100693 என்ற எண்களிலும், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 04328-277888, 9498100701 என்ற எண்களிலும் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.