'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..!' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்

திருப்பூர் அருகே, மூன்று கன்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பணம் சிக்கியது தொடர்பாக, சி.பி.ஐ-யின் விசாரணை அறிக்கையைக் கேட்டு, நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது தி.மு.க. 'அது, வங்கிப் பணமாகவே இருந்தாலும் அதை எடுத்துச்சென்ற விதம்தான் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது' என்கிறார், தி.மு.க செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன். 

கன்டெய்னர்

தமிழக சட்டமன்றத்துக்கு, கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, திருப்பூர் அருகே மூன்று கண்டெய்னர்களைப் பறிமுதல் செய்தனர் பறக்கும் படை அதிகாரிகள். அந்தக் கண்டெய்னர்களில் ரூ.570 கோடி  இருப்பதாகவும் தகவல் வெளியானது. 'தேர்தல் நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை எங்கு கொண்டுசெல்லப்படுகிறது... அது யாருடைய பணம்?' எனப் பல கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக, சி.பி.ஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தி.மு.க. இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட்டனர் நீதியரசர்கள். சி.பி.ஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி, 'இந்தப் பணம் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமானது. கோவை கிளையில் இருந்து விசாகப்பட்டினம் கிளைக்கு கொண்டுசெல்லப்பட்ட பணம்' எனத் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ-யின் விசாரணை அறிக்கையைக் கேட்டு டி.கே.எஸ். இளங்கோவன் சார்பில்  மூத்த வழக்கறிஞர் வில்சன், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். 'இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும்' என நீதியரசர்கள் தெரிவித்தனர். 

டி.கே.எஸ்.இளங்கோவன் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினோம். " பணம் எடுத்துவந்த விதம், நேரம் ஆகியவை சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. பணம் கொண்டுவந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. அப்போது அவர்கள் சீருடையிலும் இல்லை. வங்கியின் பணத்தை வெளியில் கொண்டுசெல்லும்போது, அதில் வங்கியின் ரசீது மிக அவசியம். ஆனால், சிக்கிய ரூ.570 கோடி பணத்தில் பாரத வங்கியின் ரசீது எதுவும் இல்லை. இதுபற்றி எந்த முழு விசாரணையும் நடத்தாமல், ' இது வங்கியின் பணம்தான்' என மத்திய அமைச்சர் முடிவுசெய்துவிட்டார். இதில் தொடர்புடைய வங்கி அதிகாரி ஒருவர்,பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. அது, வங்கிப் பணமாகவே இருந்தாலும் அதை எடுத்துச் சென்ற விதம் மற்றும் நேரம் தவறானது. வங்கியின் பணத்தைப் பாதுகாப்பான பெட்டியில் வைத்தே கொண்டுசெல்ல வேண்டும். ஆனால், அன்று சிக்கிய பணம் கள்ளிப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்டதற்காகவே வங்கி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும். பணம் கொண்டு செல்லப்பட்ட நேரத்தை வைத்துப் பார்க்கும்போது, அது திருப்பூர் வழியாக நீலகிரிக்குக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு அதிகம். இது நிச்சயம் வங்கிப் பணம் அல்ல. இதிலிருந்து எதையோ மூடிமறைகின்றனர்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!