வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (22/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (22/06/2018)

'கஞ்சா பயிரை அனுமதியுங்கள்'- கலெக்டரைப் பதறவைத்த விவசாயிகள்

''புற்று நோயைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் கஞ்சாவை சட்டபூர்வமாகப் பயிரிட அனுமதி வழங்கிட வேண்டும்'' என மாவட்ட கலெக்டரிடம்  கடலூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

 கஞ்சா பயிரிடக்கோரி கடலூர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர்
தண்டபாணி தலைமை தாங்கினார். கூட்டத்தில்,  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள்,
தங்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்துவந்தனர்.

குமரகுருஅப்போது உழவர் பேரியக்கத்தினர், அதன் தலைவர் குமரகுரு தலைமையில் மருத்துவ குணம்கொண்ட கஞ்சாவைப் பயிரிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ''வளர்ந்த நாடுகளில் கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், கனடா நாட்டில் கஞ்சாவைப் பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது சம்பந்தமான சட்ட மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கஞ்சா, சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. புற்றுநோயைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இத்தனை மருத்துவ குணம்கொண்ட கஞ்சாவைப் பயிரிட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். அரசே விதை கொடுத்து கொள்முதலும் செய்ய வேண்டும்'' எனவும் கோரியிருந்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் தண்டபாணி, 'இதற்கு அனுமதி அளிக்க முடியாது' என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். விவசாயிகள் கஞ்சா பயிரிட அனுமதிகேட்டதால், குறைகேட்புக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.