வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (22/06/2018)

கடைசி தொடர்பு:16:21 (22/06/2018)

'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து வழக்கும் ஜூலை 11-க்கு ஒத்திவைப்பு!

ஸ்டெர்லைட்

கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. கடந்த மே 28-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர்,ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தெளிவற்று இருப்பதாகக் கூறி,உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு, கடந்த வாரம் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவு இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும்'' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசு கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்மட்ட அதிகாரிகளிடையே கொள்கை முடிவு எடுத்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணையும் ஜூலை 11-ம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.