'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி | IPS officer meets Chennai youth, who catches his I phone thief with the help of Facebook

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (22/06/2018)

கடைசி தொடர்பு:17:45 (22/06/2018)

'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி

ஐ.பி.எஸ். அதிகாரி

சென்னையில் திருட்டுப் போன ஐ போனைக் கண்டுப்பிடித்த மருந்து விற்பனை பிரநிதியை ஐ.பி.எஸ். அதிகாரி சாரங்கன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். 

சென்னைப் பெரம்பூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிமியோன். பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார். இவரின் ஐ போன், கடந்த 13-ம் தேதி புரசைவாக்கத்தில் திருட்டுப் போனது. இதுகுறித்துக் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சிமியோனும் அவரின் நண்பர்களும் சேர்ந்து திருட்டுப் போன ஐ போனைக் கண்டுப்பிடித்தனர். செல்போனைத் திருடிய பீகாரைச் சேர்ந்த வாலிபர் பங்கஜ்குமார் என்ற பங்கஜ்சர்மாவை போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாகச் செய்தி வெளியானதும், நேற்று மாலை கூடுதல் கமிஷனர் சாரங்கன் அலுவலகத்திலிருந்து சிமியோனுக்கு போன் அழைப்பு வந்தது. `உங்களை சாரங்கன் ஐ.பி.எஸ். நேரில் சந்திக்க விரும்புகிறார். எனவே, இன்று காலை 11 மணியிலிருந்து 12 மணிக்குள் வந்துவிடுங்கள்' என்று தகவல் தெரிவித்தனர். 

 இதையடுத்து சிமியோன், அவரின் நண்பர் ஜாபர் ஆகிய இருவரும் சென்னைக் கூடுதல் கமிஷனர் சாரங்கன் அலுவலகத்துக்குச் சென்றனர். அப்போது, சிமியோனையும், ஜாபரையும் சாரங்கன் பாராட்டினார். சிமியோனிடம், `நீங்கள் செல்போனையும் திருடனையும் கண்டுபிடித்த விதம் சிறப்பானது' என்று கைக்குலுக்கினார். ஐ.பி.எஸ். அதிகாரியிடமிருந்து பாராட்டுதலைப் பெற்ற சிமியோனும், ஜாபரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

இதுகுறித்து சிமியோன் கூறுகையில், ``என்னுடைய செல்போன் தொலைந்தபோது மிகவும் வேதனையடைந்தேன். அதே நேரத்தில் மனவேதனையில் துவண்டுபோகாமல் செல்போனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். என்னுடைய முயற்சி பலன் அளித்துள்ளது. செல்போனைக் கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாரங்கன் சார், என்னை நேரில் அழைத்துப் பாராட்டியதை என் வாழ்க்கையில் மறக்க முடியாது" என்றார். 


[X] Close

[X] Close