வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (22/06/2018)

கடைசி தொடர்பு:22:17 (22/06/2018)

மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற தாசில்தாருக்கு நேர்ந்த கதி!

திருத்தணியில் மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கடத்தல் கும்பல் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

மணல் லாரி

வேலூர் மாவட்டத்திலிருந்து திருத்தணிக்கு லாரியில் மணல் கடத்திவருவதாக ரகசியத் தகவல் தாசில்தார் நரசிம்மனுக்குக் கிடைத்தது. உடனடியாக நரசிம்மன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் அம்ரோஸ், சங்கரவேல், கோட்டீஸ்வரன் ஆகியோர் இன்று காரில் சென்றனர். மணலைத் திருடிய லாரி திருத்தணி பெரியார் நகரில் வந்துகொண்டிருந்தபோது தாசில்தார் நரசிம்மன் அதை மடக்கினார். அதிகாரிகளைப் பார்த்ததும் மணலைக் கொட்டிவிட்டு லாரி அங்கிருந்து வேகமாகச் சென்றது. அதைத் தடுக்க வந்த கிராம நிர்வாக அலுவலர்களைக் கடத்தல் கும்பல் தாக்கியது. அதைத் தடுக்க முயன்ற தாசில்தார் நரசிம்மன்மீது மோதுவதுபோல லாரியைக் கடத்தல் கும்பல் எடுத்துச் சென்றது.  

இதையடுத்து நரசிம்மன், திருத்தணி போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், வேலூர் மாவட்டத்திலிருந்து திருத்தணிக்கு அடிக்கடி மணல் கடத்தப்படுகிறது என்றும் அதைக் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.