வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (22/06/2018)

கடைசி தொடர்பு:18:35 (22/06/2018)

சென்னையில் ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல்; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

சென்னை கோயம்பேட்டில், செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில், செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாம்பழங்கள்

சென்னை கோயம்பேடு பழக்கடை மார்கெட்டில், தரமற்ற முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து, அப்பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், எத்திலீன் பவுடர் மூலம் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்கவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருவது தெரியவந்தது. இதையடுத்து, செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவ்வாறு செய்பவர்கள்மீது வழக்குப்பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுகுறித்து, கோயம்பேடு காய்,கனி, மலர் வணிக சங்கத் தலைவர் தியாகராஜன் நம்மிடம் பேசுகையில், `கோயம்பேட்டில் மொத்தம் 829 பழக்கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலனோர், லாப நோக்குடன் செயற்கை முறையில் பழங்களைப் பழுக்கவைத்துவருகின்றனர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக செயற்கை முறையில் பழங்களைப் பழுக்கவைக்கும் நடைமுறை இருந்துவருகிறது. வைக்கோல் வைத்து பழங்களைப் பழுக்கவைத்த முறை மாறி, தற்போது கார்பைட் கல் கொண்டு பழங்களைப் பழுக்கவைக்கின்றனர். காயாக இருக்கும் பழங்களை பழுக்கவைக்கும் முறை  மாறி, தற்போது பிஞ்சுக் காய்களைக்கூட இந்தக் கல்மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்துவிடுகின்றனர். இதனால், அதன் சுவை முழுவதும் மாறிவிடுகிறது. இதேபோல, பழத்தின் நிறமும் மாறிவிடுகிறது. லாப நோக்கத்திற்காகவே இவ்வாறு செய்துவருகின்றனர்.  மாம்பலத்தின் வாசனையைக் கொண்டே அது இயற்கையாக பழுக்கவைக்கப்பட்டதா அல்லது செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும். வியாபாரிகள் செயற்கை முறையில் பழங்களைப் பழுக்கவைப்பதைத் தவிர்க்க வேண்டும்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.