கால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்!

அமைச்சர் செங்கோட்டையன், சக அமைச்சரை நாய் என்று கூறி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாயுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். 

செங்கோட்டையன்     

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியின் புதியக் கட்டடங்களுக்கான பூமி பூஜை விழா மற்றும் புதிய கல்வி மாவட்டமாகப் பல்லடம் உதயமாவதன் தொடக்க விழா இன்று பல்லடத்தில் நடைபெற்றது. இதில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தன் உரையைத் தொடங்குவதற்கு முன், மேடையில் இருந்த ஒவ்வொருவரையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை பற்றிப் பேசியவர், ``ஒரு எஜமானருக்கு நாய் எப்படி நன்றியுள்ள பிராணியாக இருக்கிறதோ, அதுபோல இந்த இயக்கத்துக்கு நன்றியுள்ளவராக உடுமலை ராதாகிருஷ்ணன் இருக்கிற காரணத்தினால்தான் அவருக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் பதவியை ஜெயலலிதா வழங்கினார். அந்த நன்றிக்கடனோடு இன்றைக்கு அவர் பணியாற்றி வருகிறார். நன்றியோடு மட்டுமல்ல, இந்த இயக்கத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றிய அருமை சகோதரர், இன்றைக்குக் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இங்கே அருகிலே அமர்ந்துகொண்டிருக்கிறார்’’ என்று புகழ்ந்தார். அப்போது மேடையில் அமர்ந்துகொண்டிருந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சரின் இந்தப் புகழ்ச்சியை ரசிப்பதா இல்லை வேண்டாமா என்பதுபோன்ற ஒரு குழப்பமான மனநிலையில் திக்குமுக்காடிப்போனார்.

அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஒருவர் சக அமைச்சரை பிராணியோடு ஒப்பிட்டுப் பேசியது விழாவுக்கு வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!