`இனி மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து நீட் கேள்விகள்!'- பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

`நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இனி அவர்களுடைய சொந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கப்படும்' என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

பிரகாஷ் ஜவடேகர்  நீட்

சென்னை ஐ.ஐ.டி-யில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ` நீட் வினாத்தாள்களைத் தயாரிக்க, தமிழ் மொழியில் நன்கு திறன்வாய்ந்த மொழிப்பெயர்ப்பாளர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பேசியவர், ` தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டு வரப்படும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. வரும் கல்வியாண்டில், மாநில அரசின் பாடத்திட்டத்திலிருந்து நீட் நுழைவுத் தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படும். மேலும், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கப்படும். இந்த நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆராய்ச்சி மேற்படிப்புக்காகத் திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க, இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுக்கூடமும் கூட்டமைப்பும் ஏற்படுத்தப்படும்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரையில் நிதி உதவி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது' என்றவர், ` பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு முறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை டிஜிட்டல் போர்டு முறையாக மாற்றம் செய்யப்பட உள்ளது' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!