வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (22/06/2018)

கடைசி தொடர்பு:19:02 (22/06/2018)

``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி!'' - நெகிழும் தாய்

``மூளையில் கட்டிவந்து, தினமும் 10 தடவையாவது வலிப்பு வந்து மயங்கி விழுந்துருவான் என் மகன். பலமா அடிபடும். குணப்படுத்த லட்சக்கணக்குல செலவாகும்னு தெரிஞ்சதும், எங்களை ஆஸ்பத்திரியிலேயே அம்போன்னு விட்டுட்டு என் புருஷன் போயிட்டார். `என் மகனைக் காப்பாத்துங்க'னு கும்பிடாத சாமி இல்லை.

காஞ்சனா

அரசாங்கத்துக்கிட்ட உதவி கேட்டு நாயா பேயா அலைஞ்சேன். கடை கடையாக ஏறி என் புள்ளையைக் காப்பாத்த பிச்சை கேட்டேன். என் கையில் காறி உமிழ்ந்தவங்கதான் அதிகம். போக்கில்லாமல் நின்னப்போதான், நடமாடும் சாமிகளா இந்த11 பிள்ளைகளும் வந்தாங்க. 'நாங்க இருக்கிறோம்'னு 3 லட்சம் வரை செலவு செஞ்சு என் மகனைக் காப்பாத்தியிருக்காங்க. இவங்க இல்லைன்னா, என் மகனை எமனுக்கு தாரை வார்த்திருப்பேன்" எனப் பொங்கிவரும் கண்ணீரை முந்தானையால் துடைத்தவாறு பேசுகிறார் காஞ்சனா.

 காஞ்சனா மகன்

கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரின் 23 வயது மகன் விஜயகுமார். 20 வருடங்களாக மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தார். சாலையில், பேருந்தில் எனத் திடீர் திடீரென வலிப்பு வந்து விழுந்திருக்கிறார். அரசு மருத்துவமனையில் காண்பித்திருக்கிறார்கள்.

"இங்கே இவருக்கு வைத்தியம் பார்க்க முடியாது. தனியார் மருத்துவமனையில்தான் பார்க்க முடியும். அதற்கு பல லட்சம் செலவாகும்" என்று சொல்லியிருக்கிறார்கள். 'பல லட்சம் செலவாகும்' என்றதும் விஜயகுமாரின் தந்தை மோகன், 5 வருடங்களுக்கு முன்பு சென்றவர்தான், திரும்பி வரவே இல்லை.

 காஞ்சனா

அடுத்து நடந்த சம்பவங்களைச் சொல்கிறார் காஞ்சனா, ''சொந்த வீடும் கிடையாது. நான் கூலி வேலைக்குப் போய் கால் வயித்துக் கஞ்சி குடிச்சோம். என் கஷ்டத்தைப் பார்த்துட்டு மகனும் அப்பளம் பேக்கிங் பண்ற வேலைக்குப் போனான். ஆனால், அங்கே அடிக்கடி மயங்கி விழவே,வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க. 5 வருஷமா நிலைமை மோசமாயிட்டு. அடிக்கடி மயங்கி விழுவான். விழற இடத்துல கல்லு கிடந்தா அடிபட்டு ரத்தம் கொட்டும். அதனால், இவன் பக்கத்துல ஆள் இருந்துகிட்டே இருக்கணும். அதனால், நானும் சரியா வேலைக்குப் போகமுடியலை. வீட்டு வாடகை கொடுக்கமுடியலை. வீட்டு ஓனர் வந்து நாக்கை புடுங்கிற மாதிரி கேள்விகேட்பார்.

இவனைக் கொன்னுபுட்டு நானும் நாண்டுகிட்டு செத்துடலாம்னு தோணும். ஆனால், `சாவுறதுக்கா பொறந்தோம்'னு மனசை மாத்திக்குவேன். 'இன்னும் சில மாதங்களில் ஆபரேஷன் பண்ணாட்டி கை கால் விளங்காம போயிரும். மூளை செயலிழந்து போயிரும். ஆபரேஷனுக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும்'னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க.

 மகனுடன் காஞ்சனா

எனக்கு உலகமே இருண்டாப்புல இருந்துச்சு. 10 ரூபா கொடுத்து உதவவே ஆளில்லாதப்போ 2 லட்சத்துக்கு எங்கே போறது. ராத்திரியில தூங்காம அழுதுகிட்டிருப்பேன். 'இவனைக் காப்பாத்துங்க சாமீகளா'னு எல்லா கோயில்களுக்கும் போய்வந்தேன். எந்தச் சாமிக்கும் இரக்கம் வரலை. மாவட்டக் கலெக்டருக்கு வாரா வாரம் மனு கொடுத்தேன். என் கஷ்டம் எந்த ஆபீஸரையும் எட்டலை. வேற வழியில்லாமல்தான் கடை, ஹோட்டல், தொழிற்சாலை எனப் படிகள் ஏறி நிலைமையச் சொன்னேன்.

`எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க. இந்தப் பொழப்புக்கு வேற தொழில் செய்யலாம்'னு சுடுசொற்களை வீசினாங்க. சிலர் காறி துப்பி இருக்காங்க. மனசு சுக்குநூறா உடைஞ்சு போகும். 'ஏன்டா சாமிகளா, ஏழ்மையையும் கொடுத்து, இப்படி லட்ச ரூபாய் நோயையும் கொடுத்தீங்க'னு அழுவேன். அப்படி கடைகடையா போனப்போதான், சலீம் என்கிறவர் கடையில சாதிக் அலியைப் பார்த்தேன். என் நிலைமையைக் கேட்டு, கண்ணீரைத் துடைச்சார். அவரோடு இருக்கிற 10 நண்பர்களோடு சேர்ந்து என் பிள்ளையைக் காப்பாத்தினார்.  

இனி நான் எந்தச் சாமியையும் கும்பிடப் போறதில்லை. அந்த 11 பிள்ளைகளையும் காலம் முழுக்க கும்பிடுவேன். அவங்க மட்டும் இல்லைன்னா நானும் என் பையனும் தற்கொலை பண்ணிட்டிருந்திருப்போம். நாங்க செத்த இடத்துல புல் பூண்டு முளைச்சிருக்கும்" என்றபோதே வெடித்து அழுகிறார் காஞ்சனா.

 காஞ்சனா மகன்

அவரை தேற்றிய 'இணைந்த கைகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி, "எனக்குச் சொந்த ஊர் திருவண்ணாமலை. 10 வருஷத்துக்கு முன்னாடி கரூர் வந்தேன். எங்க அண்ணன் கம்பெனியில இருந்தேன். அண்ணி காமிலா மூலமா, கம்பெனியில் வேலை பார்க்கும் நடராஜன் என்பவரின் பேத்தி அட்சயாவுக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டோம். சமூக வலை

தளங்கள் மூலம் நிதி திரட்டி, நாலே கால் லட்ச ரூபாய் செலவு செலவில் ஆபரேஷன் செஞ்சு காப்பாத்தினோம். தொடர்ந்து, பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி மகள் கிருத்திகாவுக்கும் இதய ஆபரேஷனுக்கு சமூக வலைதளங்கள் மூலம் 5 லட்சம் வரை நிதி திரட்டினோம். பிறகு, 'இணைந்த கைகள்' என அறக்கட்டளை ஆரம்பிச்சு தொடர்ந்து உதவி செய்ய நினைச்சோம். நான், என் அண்ணன் சலீம், அண்ணி காம்லா, வினோத்குமார், கண்ணன், பிரபு, முருகேசன், கார்த்திக், கயல்விழி, தமிழ்மகள், தேவகி, திவ்யா என 11 பேர் இணைந்தோம். அப்படித்தான் காஞ்சனா அம்மாவைச் சந்திச்சோம்.  

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகுமாரை காண்பிச்சோம். 'உடனே ஆபரேஷன் பண்ணலைன்னா சிக்கல். 3 லட்சம் வரை செலவாகும்'னு சொன்னாங்க. விஜயகுமார் பற்றி சமூக வலைதளங்களில் பதிவு போட்டோம். நிதி கிடைச்சதும் ஆபரேஷன் பண்ணினோம். இப்போ ரெண்டு வருஷங்களுக்கு மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்காங்க. அந்தச் செலவையும் நாங்களே ஏற்றுள்ளோம். நான் நாலு வயசா இருக்கும்போது, வைத்திய செலவுக்கு 400 இல்லாம எங்க அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னுதான் இப்படி நண்பர்கள் இணைந்து முடிஞ்ச வரை செய்யறோம். எல்லாமே நல்ல உள்ளங்களின் கருணையாலும் அவங்களின் உதவியாலும் நடக்குது. நோயில் வாடும், இயலாதவர்களின் கண்ணீரைத் துடைக்க எப்பவும் தயாராகவே இருக்கோம்'' என்கிறார்.

வறியவர்களின் கண்ணீரைத் துடைக்கும் கரங்களே தெய்வீக கரங்கள். வாழ்த்துகள் நண்பர்களே!


டிரெண்டிங் @ விகடன்