நானோ சாட்டிலைட்டை அடுத்து சந்திரனுக்கு ரோவர்... ஆச்சர்யப்படுத்தும் மாணவர்கள்! | Space Kidz India team started Moon Mission project

வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (22/06/2018)

கடைசி தொடர்பு:19:42 (22/06/2018)

நானோ சாட்டிலைட்டை அடுத்து சந்திரனுக்கு ரோவர்... ஆச்சர்யப்படுத்தும் மாணவர்கள்!

உலகிலேயே மிகச் சிறிய நானோ சாட்டிலைட்டை வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்த தமிழக மாணவர்கள், அடுத்து சந்திரனுக்கு ரோவர் விண்கலத்தை அனுப்பும் திட்டத்தைத் தொடங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். 

நானோ சாட்டிலைட்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி,தமிழகப் பள்ளி மாணவர்கள் நாசா விண்கலத்தின்மூலம் 64 கிராம் எடை கொண்ட கலாம்சாட் என்ற நானோ செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தனர். இன்று முதல் ஆண்டுக் கொண்டாட்டத்தில் ஒன்று கூடியவர்கள், அடுத்த ஆண்டு சந்திரனுக்கு ரோவர் வாகனத்தை அனுப்பும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

நானோ சாட்டிலைட்

இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ளும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஶ்ரீமதி கேசன், ``கலாம்சாட் நானோ செயற்கைக்கோள் திட்டத்தைத் தொடர்ந்து 5 புதிய திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம். இதில் முதன்மையானதாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக்கொண்டு 'Moon Mission' என்ற திட்டத்தின் கீழ் 3டி வடிவமைப்பில் சந்திரனில் ரோவர் விண்கலத்தைத் தரையிறக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம். இதில், இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் உள்ள இளைஞர்களும் எங்களுடன் கைகோக்கலாம்" என்றார். 

நானோ சாட்டிலைட்

மேலும், ``விண்வெளி ஆராய்ச்சிகுறித்து ஆர்வம் உள்ள குழந்தைகளுக்காக, இணையத்திலேயே அனைத்து விவரங்களையும் கற்றுக்கொள்ள உதவியாக,அனைத்து விவரங்களையும் தொகுத்து வெளியிட உள்ளோம். தற்போது, ராஜஸ்தான் அரசுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் வடிவமைப்பில் உருவாக்கும் சிறிய செயற்கைக்கோள்களை பலூன்மூலம் விண்வெளியில் ஏவும் திட்டத்தையும் தொடங்கியிருக்கிறோம். இதன்மூலம் பள்ளி மாணவர்கள் விண்வெளி சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகளை உருவாக்கிவருகிறோம்" என்றார்.