வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்குத் தர வரிசை வெளியீடு! | TN Agriculture university ranking List announced

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (22/06/2018)

கடைசி தொடர்பு:21:26 (22/06/2018)

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்குத் தர வரிசை வெளியீடு!

வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்  வேளாண் இளநிலை படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில்  13 இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்தக் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 18-ம் தேதி முதல் ஜூன் 17 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் உள்ள 3,422 இடங்களுக்கு  48,676 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் ராமசாமி இன்று வெளியிட்டார். இதில், திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். கொடுமுடியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீகார்திக்கா 199.67 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், 199.5 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை கோவையைச் சேர்ந்த மேனகா பிடித்துள்ளார். தர வரிசைப் பட்டியலில்  முதல் 10 இடங்களில் 8 இடங்களை மாணவிகள்  பிடித்துள்ளனர். பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சோபியா என்ற மாணவி 197.5 மதிப்பெண்ணும், புவனேஸ்வரி என்கிற மாணவி 192.5 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். இதேபோல அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவி கார்திகா 194.25 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

இதுகுறித்துப் பேசிய துணைவேந்தர் ராமசாமி, "மாணவர்கள் தாங்கள் நினைக்கும் பாடப் பிரிவிலும் கல்லூரியிலும் மட்டுமே சேர வேண்டும் என நினைக்கக் கூடாது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் படிப்புகளைத் தேர்வுசெய்வதில் அழுத்தம் செய்யக் கூடாது என்றார். மேலும், கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் 7-ம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், ஜூலை 9-ம்தேதி முதல் 13-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளதாகத் துணை வேந்தர் ராமசாமி தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் எனவும், கலந்தாய்வுக்குப் பின்னர் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளது என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க