வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (22/06/2018)

கடைசி தொடர்பு:21:25 (22/06/2018)

காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, காவிரி ஒழுங்காற்றுக்குழுவையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அமைத்தது மத்திய அரசு.

காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

காவிரி


காவிரி விவகாரத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே கர்நாடகா முதல்வர் குமாரசாமி, காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை என்று பேசியவந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காவிரி நதிநீர் தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்பு காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதன் உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், காவிரி ஒழுங்காற்றுக்குழு பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டும் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவில் உள்ள 9 உறுப்பினர்களையும் மத்திய அரசு இறுதி செய்துள்ளது. கர்நாடக நீர்வளத்துறைச் செயலாளர் காவிரி ஆணையப் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகம் இதுவரை பிரதிநிதியைப் பரிந்துரை செய்யாததால், மத்திய அரசே தற்காலிக உறுப்பினரை நியமித்துள்ளது. தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயளாலர் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பகுதிநேர உறுப்பினராகவும், தலைமைப் பொறியாளர் செந்தில் குமார் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அரசு தரப்பில் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், குழு தனது செயல்பாடுகளை விரைவில் தொடங்க உள்ளது. இதன்மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.