நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு ரோஜாப்பூ வாசனையுடன்கூடிய ஸ்டாம்ப் வெளியிட்ட ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் ரோஜாப்பூ வாசனையுடன்கூடிய மை ஸ்டாம்ப் எனப்படும் தபால் தலை வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறார்கள். ஒரு நடிகருக்கு வாசனையுடன்கூடிய ஸ்டாம்ப் வெளியிட்டது இந்தியாவிலேயே முதல்முறை என்றும் பெருமிதத்தோடு சொல்கிறார்கள்.

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரோஜாப்பூ வாசனையுடன் கூடிய ஸ்டாம்பை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

விஜய் ஸ்டாம்ப்

நடிகர் விஜயின் 44 வது பிறந்த நாளை கோலகலாமாகக் கொண்டாடி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள். எப்பவுமே விஜய் பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே தஞ்சாவூரில் விஜய்யை வாழ்த்தி ஃப்ளெக்ஸ் வைத்து மிரட்டுவார்கள். இந்த முறை ஒரு சில ஃப்ளெக்ஸ் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. அதிலும் தமிழகமே, ஏழைகளின் முகமே என்பது போன்ற வாசகங்களைத் தஞ்சாவூர் மாவட்ட ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் அச்சிட்டிருந்தனர்.

``தளபதி, `என்னால் யாரும் கஷ்டப்படக் கூடாது முதலில் உங்களோட பொருளாதாரத்தைப் பாருங்க. நான் நடிகன்தான் நல்லா சம்பாதிக்கிறேன், நல்ல முறையில் இருக்கேன். அதைப்போல் நீங்களும் உங்களையும் உங்க குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கடன் எதுவும் வாங்காமல் உங்களால் முடிந்தால் ஆடம்பர விஷயங்கள் எதுவும் செய்யாமல் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்க' எனக் கடந்த மாதமே நிர்வாகிகளை அழைத்துச் சொல்லிவிட்டார். அதனாலேயே ஃப்ளெக்ஸ் வைப்பது போன்ற வீண் செலவுகளும் ஆடம்பரமும் செய்யாமல் பயனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை மட்டும் செய்தோம்'' என்றனர் நிர்வாகிகள்.

இதுகுறித்து பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் விஜய் சரவணன், ``முடிந்தவரை உங்கள் சொந்தக் காலில் நில்லுங்கள்; மற்றவர்களின் உதவியில் வாழ நினைக்காதீர்கள். மேலும், நம்மைப் பற்றி நாமே பேசக் கூடாது. நம் செயல்கள் மூலம் நம்மை பற்றி பேச வையுங்கள், அதுதான் வெற்றியோடு புகழையும் தரும். அதற்கான செயலில் இறங்குங்கள் என்றார் தளபதி. அதன்படி நாங்கள் ஆடம்பரத்தைத் தவிர்த்து தஞ்சை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.

மேலும், ஒரு நடிகருக்கு இந்தியாவிலேயே யாரும் செய்யாததை நாங்க எங்கள் தளபதிக்கு செய்திருக்கிறோம். அதாவது, வாசனையுடன் கூடிய மை ஸ்டாம்ப் எனப்படும் தபால் தலை வெளியிட்டிருக்கிறோம். இதில் பல வகையான வாசனை திரவியங்கள் கொண்ட ஸ்டாம்ப்கள் இருந்தாலும் நாங்கள் ரோஜாப்பூ வாசனையைத் தேர்வு செய்து அந்த வாசனையுடன்கூடிய விஜய் படம் போட்ட ஸ்டாம்ப்-பை வெளியிட்டோம். இதை நாங்கள் பெருமிதமாகவும் நினைக்கிறோம். இனி விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இந்த ஸ்டாம்பை எங்கள் மாவட்டம் முழுவதும் இலவசமாகக் கொடுக்க இருக்கிறோம். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினியின் மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள், கமலின் மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!