வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (22/06/2018)

கடைசி தொடர்பு:21:50 (22/06/2018)

3 இடியட்ஸ் இரண்டாம் பாகத்துக்குத் தயாராகும் ராஜ்குமார் ஹிரானி!

அமீர்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி

அமீர்கான், மாதவன் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகிய மூவர் இணைந்து நடிக்க பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி கதை மற்றும் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு  இந்தியில் வெளியான படம் 3 இடியட்ஸ் (3 Idiots). இது பாலிவுட்டில் மிகப் பெரும் வெற்றி பெற்றது. மேலும், வெளியான சில தினங்களிலேயே பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளிக் குவித்தது. கலகலப்பான கதைக் களத்துடன், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் முறையை வேறுகோணத்தில் காட்டியிருந்தார் இயக்குநர்.

இதைத்தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் தொடர்ச்சியை எடுக்க உள்ளதாக இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘நான் நிச்சயம் 3 இடியட்ஸ் படத்தின் தொடர்ச்சியை இயக்க உள்ளேன். அதற்கான கதை எழுதும் பணியைச் சில நாள்களுக்கு முன்னர்தான் தொடங்கினேன். ஆனால், அது மிகவும் ஆரம்ப  நிலையிலேயே உள்ளது. இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடிக்க எங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்” எனக் கூறியுள்ளார். ஹிரானி தற்போது இயக்கியுள்ள `சஞ்சு’ படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு 3 இடியட்ஸ் படத்தில் முழு கவனம் செலுத்துவார் என இயக்குநருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நண்பன்

ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படம் தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர்  இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இந்தியைப் போலவே தமிழிலும் மிகப்பெரிய ஹிட் ஆனது நண்பன் திரைப்படம். தமிழ் பாக்ஸ் ஆபீஸிலும் நண்பன் படம் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தது. இந்நிலையில் இந்தியில் 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில், அது  தமிழிலும் எடுக்கப்படுமா என்றும் அதிலும் நடிகர் விஜய் நடிப்பாரா என்ற ஆர்வமும் அனைவர் மத்தியிலும் வெகுவாக எழுந்துள்ளது.