புதிய சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்பின் மனைவி மெலனியா!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி அணிந்திருந்த கோட்-டில் உள்ள  வாசகம், பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மெலானியா ட்ரம்ப்

photo Credits : twitter/@ajplus

மெக்‌ஸிகோ வழியாக அமெரிக்காவில் தஞ்சம் புகும் அகதிகளிடமிருந்து அவர்களின் குழந்தைகளைப் பிரித்துவைக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதன்படி, சுமார் இரண்டாயிரம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்து, தனியாக ஒரு முகாமில் வைத்திருந்தனர்.

இது, உலக அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பல்வேறு  நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், இந்த நடவடிக்கைக்கு ட்ரம்ப்பின் மனைவி மெலானியாவும் எதிர்ப்பு  தெரிவித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து ட்ரம்ப் தனது நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா, குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாமுக்கு நேற்று வருகை தந்திருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கோட்டில், ‘I Really Don't Care, Do U'(எனக்கு நிஜமாகவே கவலை இல்லை. உங்களுக்கு?) என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம், தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மெலானியாவின் செய்தித் தொடர்பாளர், ‘அது வெறும் கோட் மட்டும்தான். அதில் உள்ள வாசகங்களுக்கு புதிய பொருளை உருவாக்காதீர்கள்’ எனக் கூறியுள்ளார். 

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். ‘மெலானியாவின் உடையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் பொய்யான செய்தி பரப்பும் ஊடகத்தைக் குறிக்கிறது. ஊடகங்கள் எவ்வளவு நேர்மையற்றவை என்பதை மெலானியா நன்கு உணர்ந்திருக்கிறார். அவர் உண்மையிலேயே எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்’ எனப்  பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!