வெளியிடப்பட்ட நேரம்: 01:54 (23/06/2018)

கடைசி தொடர்பு:04:04 (23/06/2018)

கடைசி நேரத்தில் கோல்...! செர்பியாவை வீழ்த்தி ஸ்விட்சர்லாந்து வெற்றி! #SRBSUI

2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை முதல் கோல் அடித்து முதல்பாதியில் முன்னிலை பெற்ற அணிகளே வெற்றிபெற்று வந்தன. ஆனால், இப்போட்டியில் அந்த வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கிறது.

உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் ரஷ்யாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 'இ' பிரிவில் செர்பியா மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான மேட்ச், கலினின்கிராட் மைதானத்தில் இன்று நடந்தது. இப்போட்டியில் ஸ்விட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

2018 உலகக்கோப்பை கால்பந்து

ஆட்டம் தொடங்கியதிலிருந்து செர்பியா ஆதிக்கம் செலுத்தியது. 5வது நிமிடத்தில் துசான் தாடிச் அடித்த கிராஸை, ஹெட்டர் கோல் ஆக்கி அசத்தினார் செர்பியாவின் அலெக்ஸாண்டர் மிட்ரோவிச். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து முதல்பாதி முடியும்வரை ஸ்விட்சர்லாந்து அணியால் மீள முடியவில்லை. அவ்வப்போது தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் ஸ்விட்சர்லாந்து அணியினரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் முதல்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா முன்னிலை பெற்றது. 

கோல் அடிக்கும் செர்பியா வீரர் மிட்ரோவிச்

இரண்டாம் பாதியில் ஸ்விட்சர்லாந்து தனது கேம் பிளானை மாற்றி அட்டாக்கிங் ஆட்டத்தைத் தொடங்கியது. இதற்கு உடனடியாகப் பலனும் கிடைத்தது. 52வது நிமிடத்தில் அந்த அணியின் கிரனிட் ஹாகா கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இரு அணிகளும் வென்றாகப் போராடியதால், ஆட்டம் பரபரப்பை எட்டியது. ஸ்விட்சர்லாந்தின் பல முயற்சிகளும், செர்பியாவின் டிஃபன்ஸால் தடுக்கப்பட்டன.

இந்நிலையில் 90வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்தின் சாச்சிரி தனக்குக் கிடைத்த பந்தை, தனது எல்லையில் இருந்து தனி ஆளாக செர்பியாவின் பாக்ஸ் வரை எடுத்துச்சென்று அற்புதமான கோல் அடித்தார். ஆட்டம் ஸ்விட்சர்லாந்து வசம் சென்றது. நிறுத்த நேரமாக 4 நிமிடங்கள் தரப்பட்டது. இதில் செர்பியா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 'இ' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை முதல் கோல் அடித்து முதல்பாதியில் முன்னிலை பெற்ற அணிகளே வெற்றிபெற்று வந்தன. ஆனால், இப்போட்டியில் அந்த வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. இப்பிரிவில் பிரேசில் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 3 புள்ளிகளுடன் செர்பியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஸ்விட்சர்லாந்து வீரர் சாச்சிரி

'இ' பிரிவில் உள்ள அணிகளின் புள்ளிகளில் பெரிய வித்தியாசம் இல்லாததால், 27ம் தேதி இப்பிரிவில் நடக்கவிருக்கும் அடுத்த லீக் ஆட்டங்களின் முடிவுகளைப் பொறுத்தே, அடுத்த சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் எனத் தெரியவரும். இதனால் அடுத்து நடக்கவிருக்கும் இரு போட்டிகளிலும் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

செர்பியா அணி தனது அடுத்த போட்டியில் பிரேசில் அணியையும், ஸ்விட்சர்லாந்து அணி தனது அடுத்த போட்டியில் கோஸ்டா ரிகா அணியையும் எதிர்கொள்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க