வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (23/06/2018)

கடைசி தொடர்பு:11:47 (25/06/2018)

‘வாடை தெரியாம இருக்க சென்ட் தெளிப்போம்!’ - போலீஸாரை அதிரவைத்த கஞ்சா கடத்தல் கும்பல்

கடத்தல்

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடந்தி வந்த பெண்கள் மூவரை, சேலம் ரயில்வே போலீஸார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆழப்புலாவிற்கு ‘தன்பாத் எக்ஸ்பிரஸ்’ ரயில் இயங்கிவருகிறது. இந்த ரயில் மூலமாகத் தான் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பெருமளவிற்கு கஞ்சா இறக்குமதியாகிறதாம். இதனையறிந்த ரயில்வே போலீஸார் சமீபகாலமாகவே, அவ்வப்போது ரயிலில் மப்டியில் சென்று சோதனை நடத்தி வந்துள்ளனர். இந்தநிலையில், நேற்று ‘தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூட்டை மூட்டையாக கஞ்சாவை ஏற்றியிருக்கிறது’ என்ற ரகசியத் தகவல் சேலம் ரயில்வே போலீஸாருக்கு கிடைத்திருக்கிறது.

கடத்தல்

இந்தத் தகவலையடுத்து சேலம் வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய சேலம் ரயில்வே போலீஸார், ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை செய்திருக்கின்றனர். அப்போது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் பகுதியில் 3 பெண்கள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததும், மூட்டை மூட்டையாக கஞ்சாவை கடத்தி வருவதையும் உறுதி செய்திருக்கின்றனர். இதனையடுத்து, ரயில் ஈரோட்டில் நின்றவுடன் அந்தப் பெண்கள் மூவரையும் ரயில்வே போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்து, அவர்களிடமிருந்த 64 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான பெண்களில் ஒருவர் மதுரை மாவட்டம் கருமாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாப்பா (40) என்பதும், ஆந்திர மாநிலம் ரோல்குண்டா பகுதியைச் சேர்ந்த கொலுசு லட்சுமி (45), மற்றும் பலசி பானுமதி (35) என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கஞ்சா

‘திருப்பூர்ல உள்ள பார்த்தீபன், கதிரேசன் என்பவருக்காகத் தான் இந்த கஞ்சாவை கொண்டுட்டு போறோம். இதுக்கு முன்னாடி 2-3 தடவை எந்தச் சிக்கலிலும் மாட்டிக்காம வேலையை முடிச்சிருக்கோம். ரயில்ல கஞ்சா வாடை அடிச்சா சிக்கலாகிடும்னு தான், கஞ்சா பொட்டலத்துக்கு மேல சென்ட், கம்ஃபோர்ட்டை (துணிகளுக்கான லிக்விட்) கஞ்சா பொட்டலம் மேல தெளிச்சி வாடை தெரியாம கொண்டு வந்தோம். இருந்தும் எப்படியோ மாட்டிக்கிட்டோம். எங்களை தயவு செஞ்சி விட்டுடுங்க’ என வெகு இயல்பாக சொல்ல, போலீஸாரே ஒருகணம் மிரண்டு போயிருக்கின்றனர்.

கஞ்சா

இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் பேசினோம். “ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், அவர்களை டார்கெட் செய்து ஒரு கும்பல் ஆந்திராவிலிருந்து கஞ்சா இறக்கி சப்ளை செய்து வந்திருக்கிறது. ஒரு ஆளுக்கு 5 ஆயிரம் கூலி என்ற வகையில் பெண்களைக் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கடத்த வைத்திருக்கிறார்கள். ஒரு பண்டலில் 2 கிலோ என்று பேக் செய்து, மொத்தம் 32 பண்டல்களில் 64 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். கள்ள மார்க்கெட்டுகளில் இதன் விலை சுமார் 10 லட்சத்திற்கு மேல் இருக்கும். பொதுவாகவே, பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலமாகத் தான் இந்த கஞ்சா கடத்தல் நடைபெறுகிறது. சேலம் கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 170 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றார்.