மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை..! சிறு, குறு தொழில்துறைச் செயலாளர்

ஹேக்கத்தான்

தமிழகத்தில் இளம் தலைமுறையினரை தொழில் முனைவோர்களாக்க உதவும் ஸ்டார்ட்-அப் பாலிசி இன்னும் சில மாதங்களில் தொடங்கும் எனத் தமிழகச் சிறு குறு தொழில் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் `2018 ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' எனும் வன்பொருள் வடிவமைப்பு போட்டி கடந்த 18-ம் தேதி, முதல் 22-ம் தேதி, வரை நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஃபோர்ஜ் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் கேரளா, தெலங்கானா, குஜராத், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 9 தொழில்நுட்பக் கல்லூரிகள் பங்கேற்றிருந்தன. இறக்குமதிக்கான மாற்றுப்பொருள் உருவாக்கம் மூலமாக மேக்-இன் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா ஸ்கில் ஸ்டார்ட்-அப் இந்தியா ஆகிய இலக்குகளை எட்டுவதற்கான முன்னோடியாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன.

குறிப்பாகப் பெரு நகரங்களில் அதிக அளவு புகையினால் ஏற்படும் காற்று மாசு அளவைக் கண்டறிந்து அறிவிக்கக் கூடிய கருவி,தேவையற்ற நேரங்களில் இயங்கும் மின்சார உபகரணங்களை அனைத்து மின்சாரத்தைச் சேமிக்கும் கருவி, கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்களுக்கான காது கேட்கும் கருவி போன்றவை சிறப்பிடம் பெற்றிருந்தன. மேலும், பல்வேறு குழுக்களாக புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தொடர்ந்து இரவு பகல் என 120 மணி நேரம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழக சிறு, குறு தொழில் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ்  பத்திரிகையார்களிடம் கூறியதாவது, ``மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் பாராட்டத்தக்கது. தமிழக அரசும் மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழக அரசு அறிவித்துள்ள `இனோவேஷன் வவுச்சர் ஸ்கீம்' எனப்படும் திட்டம் மூலம் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகளை முழு வடிவமாக்க 2 முதல் 5 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதுபோன்று ஆண்டுக்கு 400 புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் தொழில் தொடங்குவதற்கான ஸ்டார்ட் அப் பாலிசி அடுத்த மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதேபோல் தமிழகத்திலுள்ள மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 300 கல்லூரிகளில் தொழில் முனைவோர் மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 150 கல்லூரிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை அவர் வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!