`ரங்கநாதரிடம் சரணடைந்துவிட்டார் ஸ்டாலின்' - திண்டுக்கல் சீனிவாசன்! | dindigul Seenivasan slams stalin and dravidar kazhagam

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (23/06/2018)

கடைசி தொடர்பு:10:52 (23/06/2018)

`ரங்கநாதரிடம் சரணடைந்துவிட்டார் ஸ்டாலின்' - திண்டுக்கல் சீனிவாசன்!

காவிரி மீட்பு வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று மதுரை ஆரப்பாளையத்தில் நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் சீனிவாசன்

அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ``இன்னைக்கு பத்திரிகையாளர்கள் அதிகமா வந்திருக்கீங்க. வனத்துறை அமைச்சர் வந்திருக்கார். அவர் என்ன பேசப்போறார்னு பார்க்க வந்திருக்கீங்க.'' என்று ஆரம்பித்தவர், ''எங்கள் ஆட்சிக்கு எதிராக ஸ்டாலின் என்னன்னவோ போராட்டம் பண்ணி பார்த்தும் கதை ஆகாததால் ரங்கநாதரே கதி என்று அவர் காலில் விழுந்துட்டாரு. இவர் ஆட்சிக்கு வரதுக்காக கே.என்.நேரு யாகம் வளர்த்திருக்காரு. அதில் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். பகுத்தறிவைப் பற்றி இவர்கள் எங்களுக்குப் சொல்லுவார்கள். கடைசியில்  ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரிடம் சரணடைந்து விட்டார். ஸ்ரீரங்கம் போனாலும் சரி,  திருப்பதிக்குப் போய் மொட்டைப் போட்டாலும் சரி உங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஆரம்பகாலத்தில் மதுரைக்கும் அவருக்குமான தொடர்பை நீண்ட நேரம் பேசினார். பின்னர்,  ``ஸ்டாலின் கடைசியில் ரங்கநாதரின் காலில் விழுந்து விட்டார். மத நம்பிக்கை எல்லோருக்கும் வேண்டும். அது தப்பில்லை. இதுல ஓவரா நடிச்சது ஸ்டாலின். அவர்கள் தோல்விக்குக் காரணமே கடவுள் நம்பிக்கை இல்லை என்பதுபோல நடித்ததுதான். இவர் நடைப்பயணம் போகும்போதே ஜோதிடரைப் பார்த்தவர்தான்.  திமுக, தி.கவை திருத்த முடியாது. ஆனால், திடீரென கடவுளைக் கும்பிட்டால் எதுவும் நடக்காது. காரணம் அந்தளவுக்குப்  பாவம் செய்திருக்கிறார்கள்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க