பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி, தந்தையுடன் கைது!

மதுக்கடைகளுக்கு எதிராகவும், சமூகப் பிரச்னைகளுக்காகவும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடி பல வழக்குகளை சந்தித்து வரும் சமூக ஆர்வலர் மதுரை நந்தினி நேற்று இரவு அவரது தந்தை ஆனந்தனுடன் கைது செய்யப்பட்டார்.

மதுரை நந்தினி, தந்தையுடன் கைது!


 `தமிழகத்தில் பி.ஜே.பி.யின் மறைமுகமான ஆதரவில் காட்டாட்சி நடத்துகிற எடப்பாடி அரசைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டுமென்றும், தேர்தலை நம்பகமான முறையில் வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் டெல்லியில் பிரதமர் இல்லத்தின் முன் வரும் 25 ம் தேதி கண்டன ஆர்பாட்டம் செய்யப் போவதாக சமூக ஆர்வலர் நந்தினியும் அவரது தந்தையும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் டெல்லி புறப்பட்டுச் செல்கிற நாளை கவனித்து வந்த மதுரை மாநகரக் காவல்துறையினர், நேற்று இரவு 9 மணிக்குப் புதூரிலிருக்கும் வீட்டுக்குச் சென்று டெல்லி கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் மதுரை மாநகரக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இரவு தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் நந்தினியையும், புதூர் காவல் நிலையத்தில் ஆனந்தனையும் வைத்திருந்தனர். இதுவரை அவர்கள்மீது எந்த வழக்கும் போடவில்லை. தற்போது காவல் நிலையத்திலேயே அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!