`வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்' - ஸ்டாலினைச் சாடும் தமிழிசை!

``வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார்'' என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழிசை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருக்குத் தி.மு.க தரப்பில் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்தநேரத்தில் ஆளுநரின் கார்மீது கறுப்புக்கொடி வீசியதாகத் தி.மு.க-வினர் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நேற்று பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கைது நடவடிக்கையைக் கண்டித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக தமிழிசை சௌந்தரராஜன் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ``அமித் ஷா மீது கூறப்படும் குற்றச்சாட்டுத் தவறானது. பாஜக மீது எந்தப் புகாரும் கூற முடியாததால், அமித் ஷா மீது காங்கிரஸ் தவறான தகவல்களை பரப்புகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் ஸ்டாலின் செயல்படுகிறார். இதனால்தான் குறைகளைக் கண்டுபிடிப்பதில் மட்டுமே அவர் முயற்சி செய்கிறார். அவருக்கு மக்கள் நலனில் விருப்பம் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காகத்தான் ஆளுநர்மீது விமர்சனம் செய்கிறார்கள். மக்கள் நலனுக்காகத்தான் ஆளுநர் ஆய்வுகளை மேற்கொள்கிறார். ஒட்டுமொத்தமாகத் தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார். தி.மு.க ஆட்சியில் கொண்டுவர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை பா.ஜ.க ஆட்சி கொண்டுவந்துள்ளது. பா.ஜ.க-வின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!