வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (23/06/2018)

கடைசி தொடர்பு:11:00 (23/06/2018)

நள்ளிரவில் சென்னைப் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!

புதுமண தம்பதி

நள்ளிரவில் மூன்றாவது மாடியிலிருந்து பேசிக்கொண்டிருந்த புதுமணத் தம்பதி, திடீரென கீழே விழுந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

சென்னைத் தரமணி, கானகத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் குடியிருப்பவர் சங்கலிங்கம். டிரைவர். இவருக்கும் சுப்புலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான்திருமணம் நடந்தது. சந்தோஷமாகச் சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில் நேற்றிரவு துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 

நேற்றிரவு கணவனும் மனைவியும் மூன்றாவது மாடியில் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரெனச் சங்கலிங்கம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். சங்கலிங்கத்தின் கையைப் பிடித்து காப்பாற்ற முயன்றார் சுப்புலட்சுமி. ஆனால், எதிர்பாராதவிதமாக இருவரும் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

`டமார்' என்ற சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். ரத்த வெள்ளத்தில் சங்கலிங்கமும் சுப்புலட்சுமியும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக தரமணி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமான ஒருமாதத்தில் கணவனும் மனைவியும் மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் தரமணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.