களைகட்டியது குற்றாலம் சீசன்.. அருவிகளில் குவியும் மக்கள் கூட்டம்!

குற்றாலத்தில் சீசன் களைகட்டியிருப்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. விடுமுறையைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே மணிமுத்தாறு அருவியில் 14 நாள்களுக்குப் பின்னர் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

குற்றாலம் சீசன்

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அத்துடன், குளுமையான தென்றல் காற்றுடன் சாரல் மழையும் பெய்வதால் இதமான சீதோஷ்ணநிலை நிலவுகிறது. வார விடுமுறையில் குற்றாலம் சீசன் குளுமையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருவதால் கூட்டம் அதிகரித்துள்ளது. 

மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில், கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், வரிசையில் நிறுத்தப்பட்டு குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஐந்தருவியின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் விழுவதால் அங்குச் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்கிறார்கள். புலியருவியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அலைமோதுகிறது. பழைய குற்றாலம் அருவியிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. 

இதனிடையே, குற்றாலத்தில் ரம்ப்டான், துரியன் பழங்கள் விற்பனை அமோகமாக இருக்கிறது. மலைகளில் விளையும் பலா, வாழை, மாம்பழங்களின் விற்பனையும் ஜோராக நடக்கிறது. அனைத்துப் பூங்காக்களும் நிரம்பி வழிகின்றன. ஐந்தருவிக்கு அருகில் உள்ள எக்கோ பார்க் மற்றும் படகுக் குழாமிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. படகுகளில் பயணிக்க ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் நின்றுவிட்டதால் 14 நாள்களுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவியில் பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் ஒரு பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. மணிமுத்தாறு அருவியிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!