`காற்றில் வரும் செய்திக்கு நான் பொறுப்பல்ல'- சொல்கிறார் தினகரன்

தினகரன்

``8 எம்.எல்.ஏ-க்கள் உட்பட 2 அமைச்சர்கள் எங்களிடம் வரும் செய்தி காற்றில் வருகிற செய்தி. அதற்கு நான் பொறுப்பில்லை" என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ``மக்கள் தங்களது உண்மையான கோரிக்கையை வலியுறுத்தி சட்டத்துக்குக் கட்டுப்பட்டு போராட்டம் நடத்துகின்றனர். ஏன் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காந்தியே அறவழிப் போராட்டம் நடத்தியவர்தான். தூத்துக்குடியில் சுகாதாரக்கேடு நிகழக் கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டது. 8 வழிச்சாலையினால் விவசாயிகள் பாதிப்படைகிறார்கள். அதனாலேயே மக்கள் போராட்டம் வெடிக்கிறது. இவர்கள் சமூக விரோதிகள் அல்ல.

காவல்துறையினர் மக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். மத்திய அரசு தாய்கோழி தன்குஞ்சைக் காப்பற்றுவதுபோல மாநில அரசைக் காப்பாற்றுகிறது. பெண் பத்திரிகையாளர்களை தரக் குறைவாகப் பேசுகிறார்கள். எங்கள் கட்சி புறநகர் மாவட்டச் செயலாளர் மேலூர் சரவணனை தீவிரவாதிபோல் கைது செய்திருக்கிறார்கள். எஸ்.வி.சேகரை கைது செய்ய அரசு பயப்படுகிறது. இந்த அரசு போராடுகிற மன்சூர் அலிகான், வளர்மதி போன்றவர்களை கைது செய்ததில் என்ன நியாயம் உள்ளது.

குட்கா விஷயத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே என் கருத்து. இதைத் துரிதப்படுத்துவதில் தவறு இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையிலும் தேவை. அதுபோல் இன்னும் ஒரு மாவட்டத்துக்கு வந்தாலும் நல்லதுதான். உலகப் புகழ் பெற்ற ஜெயலலிதாவின் புகைப் படத்தைச் சட்டமன்றத்தில் திறந்தவிதம் என்பது முனிசுபாலிட்டியில் திறந்ததுபோல் இருந்தது. அது அம்மாவை இழிவுபடுத்தும் விதமாக இருந்தது. அதனாலே நான் செல்லவில்லை. 8 எம்.எல்.ஏ-க்கள் உட்பட 2 அமைச்சர்கள் எங்களிடம் வரும் செய்தி காற்றில் வருகிற செய்தி. அதற்கு நான் பொறுப்பில்லை. 8 வழிச்சாலை திட்டம் என்றால் என்ன என்பதை முதலில் நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பின்பு விவசாயிகளை பாதிக்கவில்லையென்றால் செயல்படுத்துங்கள். கமல்ஹாசன் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்தை கருத்தில்கொள்ள வேண்டியதில்லை'' என்றார் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!