வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (23/06/2018)

கடைசி தொடர்பு:13:40 (23/06/2018)

சாலையில் தூக்கிவீசப்பட்ட மாணவி... டிரைவரின் மனிதநேயம்... கடைசியில் பறிபோன உயிர்

மாணவி

 சென்னை, பனையூர், கிழக்கு கடற்கரைச் சாலையில் அம்மாவுடன் நடந்து சென்ற மாணவி, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

விழுப்புரத்தைச் சேர்ந்த வேலு- எழிலரசி தம்பதியின் மகள் முனியம்மாள். இவர்கள் குடும்பத்துடன் பனையூரில் குடியிருந்துவருகின்றனர். வேலு காவலாளியாகவும் எழிலரசி கூலி வேலையும் செய்துவருகின்றனர். முனியம்மாள், பனையூரில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்துவந்தார். 

இந்தநிலையில் எழிலரசியும் முனியம்மாளும் பனையூர் ராஜீவ்காந்தி நகர் அருகே நடந்து சென்றனர். அப்போது இருவரும் சாலையைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, அக்கரையிலிருந்து கோவளம் நோக்கிச் சென்ற வாகனம் முனியம்மாள்மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்திய டிரைவர் வாகனத்திலிருந்து இறங்கிய, முனியம்மாளை அதே வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், முனியம்மாள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிறகு தனியார் மருத்துவமனை டாக்டர்களும் பரிசோதித்துவிட்டு இறப்பை உறுதி செய்தனர். தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக முனியம்மாளின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்தியவர் குறித்த தகவல் மட்டும் போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மாணவியின் உயிரைக் காப்பாற்ற முயன்ற டிரைவரின் மனிதநேயம் நெகிழவைத்தாலும் கடைசியில் ஓர் உயிர் பறிபோய்விட்டது.