வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (23/06/2018)

கடைசி தொடர்பு:14:05 (23/06/2018)

``கறுப்பானவள்; தரித்திரமானவள் நீ என்றனர்'- உணவில் விஷம் கலந்து கணவரின் உறவினர்களைக் கொன்ற மனைவி

`கறுப்பாக இருக்கிறாய்...அதனால் நீ தரித்திரமானவள்...' என்று வசைபாடிய கணவர் வீட்டாரைப் பழிவாங்க, விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் பூச்சி மருந்தைக் கலந்திருக்கிறார் மனைவி. போலீஸார் விசாரணையில் இந்தத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

உணவு

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹ்தாத் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் மனே. இவர் புதிதாகக் கட்டியுள்ள வீட்டின் கிரஹபிரவேசம் கடந்த 19-ம் தேதியன்று நடக்கவிருந்தது. முன்னதாக, 18-ம் தேசி இரவில் `வாஸ்து சாந்தி' பூஜை நடத்தியுள்ளனர். அப்போது, பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது. உணவைச் சாப்பிட்ட விருந்தினர்களுக்கு ஒருவர் பின் ஒருவராக வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அனைவரும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து வழக்கு  பதிவு செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளவர் சுபாஷ் மனேவின் உறவினர் பெண்ணான பிராக்யா சுர்வேஸ். 

உணவு

போலீஸாரிடம் அவர் அளித்த வாக்கு மூலத்தில், `கறுப்பாக இருக்கும் எனது நிறத்தைச் சுட்டிக்காட்டி, கணவரின் குடும்பத்தினர் மற்றும் அவரின் உறவினர்கள் கடுமையாக வசை பாடிவந்தனர். கறுப்பாக இருப்பதால், `நீ வீட்டுக்குத் தரித்திரம்' என்று தொடர்ந்து, எனது நிறத்தைக் காரணம் காட்டி குறையாகவே பேசிவந்தனர். அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, கணவரின் குடும்பத்தினருக்குப் பணிவிடை செய்து வந்தேன். ஆனால், அவர்கள் சும்மா இருக்கவில்லை. மற்ற உறவினர்களைவிட கணவரும், அவரின் குடும்பத்தினரும் என் மனம் புண்படும்படி வார்த்தைகளால், காயப்படுத்தி வந்தனர். இவர்களைப் பழி வாங்கத் தீர்மானித்து, தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன். அப்போது, சுபாஷ் மனே புதிதாகக் கட்டிய வீட்டின் கிரஹபிரவேச நிகழ்ச்சி வந்தது. அதில், கணவன் வீட்டைச் சேர்ந்த பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அவர்களைப் பழிவாங்கவே உணவில் பூச்சி மருந்தைக் கலந்தேன். விஷம் கலந்த உணவை, நானே பரிமாறினேன்' எனக் கூறியுள்ளார்.