வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (23/06/2018)

கடைசி தொடர்பு:11:46 (25/06/2018)

பாளையங்கோட்டை சிறையில் உள்ள முகிலன் தேசத்துரோக வழக்கில் மீண்டும் கைது!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றபோது தொடரப்பட்ட வழக்குகளுக்காகக் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட முகிலன்மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு சிறையின் உள்ளேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

தேசத் துரோக வழக்கு - முகிலன்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளைகளுக்கு எதிர்ப்பு, தண்ணீர் திருட்டுக்கு எதிரான போராட்டம், அணு உலைக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த முகிலன், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கூடங்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அணு உலை எதிர்ப்புப் போராட்ட வழக்குகள் காரணமாகக் கைது செய்யப்பட்ட அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தன் மீதான வழக்குகளை விரைந்து நடத்த வலியுறுத்திவரும் முகிலன், ஜாமீன் கேட்காமல் தொடர்ந்து சிறையின் உள்ளேயே இருந்து வருகிறார். சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், கூடங்குளம் போராட்டம் தொடர்பாக ஒரு லட்சம் அப்பாவி மக்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

அவர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 279 நாள்கள் கடந்த நிலையிலும் ஜாமீன் கேட்காமல் சிறையிலேயே உள்ளார். இந்த நிலையில், அவர்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் மணல் குவாரிகளை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில், அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்று உண்ணாவிரதம் இருந்ததாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்குக்காக அவரை கரூர் மாவட்ட போலீஸார் நேற்று (22-ம் தேதி) கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். ஆனால், அதற்கு முன்பாக 21-ம் தேதி மாலையில் அவர்மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டு பாளையங்கோட்டை சிறையின் உள்ளேயே குறிப்பாணை கொடுத்து கரூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். தமிழ் ஆர்வலர்களையும், அரசின் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களையும் அச்சுறுத்தும் விதமாகவே முகிலன்மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.