வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (23/06/2018)

கடைசி தொடர்பு:15:56 (23/06/2018)

ஓரிரு நாளில் சல்பியூரிக் ஆசிட் முழுவதும் அகற்றம்- கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

``ஸ்டெர்லைட் ஆலையில் கசிவடைந்த சல்பியூரிக் ஆசிட் சேமிப்பு கலனிலிருந்து இதுவரையிலும் 1,500 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாளில் முழுமையாக அகற்றப்படும்” என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து சல்பியூரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டுள்ளது என்று வெளியான தகவலின் அடிப்படையில் கடந்த 17-ம் தேதி, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், மாவட்ட தீயணைப்பு அதிகாரி, தொழில்துறை ஆய்வாளர்கள், தாசில்தார்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சல்பியூரிக் ஆசிட் இருக்கும் சேமிப்புக்கலனில் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் மறுநாள், கடந்த 18-ம் தேதி முதல் டேங்கர் லாரிகள் மூலம் ஆசிட் அகற்றும் பணி தொடங்கியது. 6 வது நாளாக இன்றும் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``ஸ்டெர்லைட் ஆலையில் 85 லாரிகளில் 1,500 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. 6வது நாளாக இப்பணி இன்றும் நடைபெற்று வருகிறது.

சல்பியூரிக் ஆசிட்டுடன் வெளியேறும் லாரி

இன்னும் ஒரே நாளில் சேமிப்புக் கலனில் உள்ள சல்பியூரிக் ஆசிட் முழுமையாக வெளியேற்றப்பட்டு விடும். ஏற்கெனவே  அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுவினர், மீதம் இருக்கக்கூடிய ஆசிட் இருப்பினை ஆய்வு செய்து தரம்பிரித்துத் திட்டமிடும் பணியினை மேற்கொள்வார்கள். மேலும், ஏதாவது ஆசிட் கழிவுகள் உள்ளதா? மற்ற ஆசிட் சேமிப்புக் கலன்களில் உள்ள இருப்பு நிலை குறித்தும் இக்குழு ஆய்வு செய்யும். ஆய்வுக் குழுவினரின் அறிக்கைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க