`காவிரி விவகாரத்தில் எங்களை கேட்காமலே மத்திய அரசு செயல்படுகிறது!’ - குமாரசாமி குற்றச்சாட்டு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு எங்களை கேட்காமலே செயல்படுவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   

குமாரசாமி

Photo Credit: ANI

உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களையும் நியமித்தது மத்திய அரசு. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் தலைமையகம் பெங்களூரிலும் செயல்படும் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம் தேவையில்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ``காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றை மத்திய அரசு எங்களை கேட்காமலே அறிவித்துள்ளது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு எங்கள் பொறுமையைச் சோதிக்கிறது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என எங்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்திருந்தோம். இப்படியான சூழலில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட முடிவெடுப்போம்'’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!